சட்டீஸ்கரில் 22 வீரர்கள் பலியான சம்பவம்; நக்சல் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹித்மா யார்?

ராய்ப்பூர்: நக்சல் தாக்குதலில் 22 வீரர்கள் பலியான நிலையில், அவர்களின் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். நக்சல் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹித்மா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டீஸ்கர் நக்சல் தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவரை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார்.

தாக்குதலில் இறந்த வீரர்களின் உடலுக்கு அமித் ஷா மரியாதை செய்தார். அதன் பிறகு, நக்சல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே, நக்சல் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹித்மா (40) குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் விடுதலை கொரில்லா படையின் (பிஎல்ஜி) பட்டாலியன் எண்: 1 படையின் தலைவராக ஹித்மா செயல்பட்டு வருகிறான். பயங்கரமான மற்றும் கொடிய தாக்குதல்களுக்கு பெயர் போனவன். பெண்கள் உட்பட 180 முதல் 250 நக்சல்களின் தலைவராக உள்ளான். தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் உறுப்பினரான ஹித்மா குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தேடப்பட்டு வரும் ஹித்மா, தனது பெயரை சந்தோஷ், இந்துல், பொடியம் பீமா போன்ற பல பெயர்களில் ரகசியமாக பல இடங்களில் சுற்றிவருகிறான். நக்சல்களின் கோட்டையாக கருதப்படும் சுக்மா மாவட்டத்தில் ஹித்மாவின் அனைத்து நக்சல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பழங்குடியினத்தை சேர்ந்த ஹித்மா இளம் வயதிலேயே நக்சல் அமைப்பின் உயர்மட்ட மத்தியக் குழு உறுப்பினராக 1990ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டான். ஆயுதங்களை கையாளுதல், நக்சல் அமைப்பினரை ஒருங்கிணைத்தல், கொரில்லா தாக்குதல் படையின் நிபுணனாக இருந்து வருகிறான். தற்போது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலின் மூளையாகவும் ஹித்மா செயல்பட்டுள்ளான். தற்போது பாதுகாப்பு படை நக்சல் பதுங்கியுள்ள பகுதியை சுற்றி வளைத்துள்ளதால், அடுத்த கட்ட மோதல்கள் தீவிரமானதாக இருக்கும்’ என்றனர்.

Related Stories:

>