சொந்த கிராமத்தில் சேவை செய்ய ஆசையாம்... பஞ். தேர்தலில் ‘மிஸ் இந்தியா’ போட்டி: உத்தரபிரதேச மக்கள் வியப்பு

லக்னோ: சொந்த கிராம மக்களுக்கு சேவை செய்வதற்காக உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற இளம்பெண் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த சிட்டோரி கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி மும்பை சென்றார். சில ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து கோவாவுக்கு குடிபெயர்ந்தார். அவரது மகள் தீக்‌ஷா சிங், கடந்த 2015ம் ஆண்டு பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவியாக படித்து வந்த போது ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் இந்தாண்டு பிப்ரவரியில் தீக்‌ஷாவின் ‘ரப்பா மெஹர் கரே’ என்ற ஆல்பம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இவர் ‘இஷ்க் தேரா’ பாலிவுட் படத்தில் ரைட்டராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற தீக்‌ஷா சிங், தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடக்கும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இதற்காக சிட்டோரியின் 26வது வார்டு வேட்பாளராக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து தீக்‌ஷா சிங் கூறுகையில், ‘முதலில் நாம் நமது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதனால், எனது கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிட கோவாவில் இருந்து உத்தரபிரதேசம் வந்துள்ளேன்.

நான் வெற்றி பெற்ற பிறகு, கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இங்குள்ள பெண்களின் நலனுக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என்றார். ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற தீக்‌ஷா சிங், நடிகையாக வளர்ந்து வரும் நிலையில் சொந்த மாநிலமான உத்தரபிரதேச தேர்தல் அரசியலில் இறங்கி இருப்பது மாநில மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>