×

குமரியின் இயற்கையை அழித்து கனிமங்கள் கடத்துவது தடுக்கப்படுமா?

மார்த்தாண்டம்: குமரியில் தொடங்கும் மேற்குதொடர்ச்சிமலை குஜராத் வரை சுமார் 1500 கிலோமீட்டர் நீண்ட மலைத் தொடராக உள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள மாநிலங்கள் பெருமளவு மழை வளத்தை பெறுகின்றன. இந்த மலை பகுதிகளை பாதுகாக்க  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாதவராவ் காட்கில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கொடுத்த அறிக்கைபடி மலை பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கஸ்தூரி ரங்கன் குழு அமைத்து பாதுகாக்கப்பட்ட மலை பகுதிகளாக மேற்கு தொடர்ச்சி மலையை அறிவித்தனர். அதன்படி பாறைகளை உடைக்க, குளம் குட்டை அமைக்க, கட்டடம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்த  தடைகளை கண்டுகொள்ளாமல் குமரி மாவட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக கலெக்டர்கள் கல்குவாரிகள் அமைக்க அனுமதி அளித்தனர். இதன்மூலம் கடந்த 20  வருடங்களாக கனிம வள திருட்டு நடந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இயற்கை வளம் சிதறடிக்கப்பட்டு, மழை வளம் குறைந்து மாவட்டமே  பாலைவனமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சிலர்  பினாமி பெயர்களில் குமரிமாவட்ட மலைப்பகுதிகளை உடைத்து கனிமங்களை கேரளாவுக்கு கடத்துகின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் ஆதரவுடன் கனிமவள கடத்தல் நடந்து வந்தது. இதுதொடர்பாக  தொடரப்பட்ட வழக்கில் குமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து, கற்களை பெயர்த்து  எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

அந்தத் தடையை நடைமுறைப்படுத்த  வேண்டிய மாவட்ட நிர்வாகம் கனிம வள கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக கல்  குவாரிகள் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த சட்டவிரோத அனுமதியை வைத்து பாறைகளை உடைத்து அதை ஜல்லிகளாகவும், எம் சான்டாகவும் மாற்றி கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், மாவட்ட வளர்ச்சிக்காக கனிம வளங்கள் கடத்தப்படுவதைதடுப்பது தொடர்பாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் கனிமவளம் கடத்தலை தடுப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடவில்லை. இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து  சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது, கேரளாவுக்கு கனிம  வளம் கொண்டு செல்ல உத்தரவு வாங்கி இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் சட்டவிரோதமாக வாகனங்களின் பாடி உயரத்தை மாற்றி கனிமங்களை  கடத்துகின்றனர். இதை தடுக்க காவல்துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு  அமைத்து குமரி நெல்லை எல்லை பகுதியான ஆரல்வாய்மொழியில் உள்ள சோதனைச் சாவடி அருகே  எடை மேடை அமைத்து மேற்கண்ட அதிகாரிகள் குழு கண்காணிப்புடன் எடை சீட்டு வழங்க வேண்டும். இதன்மூலம் மழை அளவு பெருகும். நிலவளம் மேம்படும். தண்ணீர்  பற்றாக்குறை முற்றிலும் தீரும்  என கூறினார்.

Tags : Kumari , Will the smuggling of minerals be stopped by destroying the nature of Kumari?
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து