சினிமா ‘டயலாக்’ பேசி வலையில் வீழ்த்தி 9 பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபர்

திருமலை: சினிமா டயலாக் பேசி வலையை விரித்து 9 ெபண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி இவரது மனைவிகள் எனக்கூறி 2 பெண்கள், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் புகார் அளித்தனர். இதுகுறித்து டிஜிபி கவுதம் சவாங் உத்தரவின்பேரில் விசாகப்பட்டினம் துணை காவல் ஆணையர் ஐஸ்வர்யா ரஸ்தோகி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர்.  

விசாரணையில், அருண்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கமுடைய அருண்குமார், பல பெண்களின் பின்னால் சுற்றி அவர்களிடம் திரைப்பட வசனங்களை பேசி தனது காதல்  வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் அவர்களை திருமணம் செய்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், மிகவும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அந்த பெண்களை தள்ளியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை அருண்குமார் 9 பெண்களை திருமணம் செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது. இதற்கிடையில் அருண்குமாருக்கு கஞ்சா கடத்தல் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கன்சர்ல பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அருண்குமார் வசித்து வரும் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் துப்பாக்கி, வீச்சரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அருண்குமார் மீது புகார் கொடுத்த பெண்கள் 2 பேரும், அவரது முதல் மற்றும் 2வது மனைவி என்பதும், மகளிர் ஆணைய உதவியுடன் போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், அருண்குமார் தமது கணவரை கொலை செய்துள்ளதாக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனிஷ்குமார் சின்ஹாவிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். கொலையானவர் அருண் குமாரின் நண்பர் என கூறப்படுகிறது. அதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>