×

வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் நீக்கம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் அந்த இல்லத்தில் வசித்த அவருடைய தோழி சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலா வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போயஸ்கார்டன் இல்லத்தில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஓட்டு இருந்தது. இந்தநிலையில், போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வேதா இல்லத்தில் வசித்த அனைவருடைய வாக்குகளும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு தொகுதி அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
‘வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் நீக்கப்பட்டது சட்டவிரோதமானது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்யும் போது அவர்கள் வேறு பகுதியில் வசித்தால் அந்த பகுதியில் அவர்களுக்கு வாக்குகளை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயரை நீக்கியது தொடர்பாக வழக்கறிஞர் குழு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து முறையிட உள்ளனர். இவ்வாறு கூறினார்.

Tags : Veda house ,Sasikala , Sasikala's name removed from voter list as Vedha House was nationalized
× RELATED 7 ஆண்டுகளுக்கு பிறகு போயஸ் கார்டனில்...