×

பூந்தமல்லியில் திருக்கச்சி வரதராஜ பெருமாள் கோயிலில் 3 கருட சேவைகள்

பூந்தமல்லி: காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியமும், ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கர்யமும் செய்து வந்தவர், பூந்தமல்லியை சேர்ந்த திருக்கச்சி நம்பிகள். முதுமை காரணமாக காஞ்சிபுரம் செல்ல முடியாத நிலையில், சூரிய மண்டலத்தில் காஞ்சி வரதர் காட்சியளித்தார். அவருடன் ஸ்ரீரங்கத்து திருவரங்கனும், திருமலை திருவேங்கடவனும் காட்சியளித்தனர். மேலும், ‘இனி நீங்கள் எங்களை தரிசிக்க காஞ்சிக்கு வரவேண்டாம். நாங்கள் மூவரும் ஒரே நாளில் உங்களுக்காக இங்கேயே சேவை சாதிக்கிறோம்’ என மூவரும் பூந்தமல்லியில் நிரந்தரமாக கோயில் கொண்டனர் என தல வரலாறுகள் கூறுகின்றன.

இந்நிகழ்வைக் கொண்டாடும் வகையில், வருடத்தில் ஒரு நாள் பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி மாதம், ஞாயிற்றுக்கிழமையன்று 3 கருட சேவைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் 3 பெருமாளும் கோயிலின் முக்கிய 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, நிறைவாக கோயில் வளாகத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மற்ற கோயில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும் நிலையில், பூந்தமல்லியில் மட்டும்தான் 3 கருட சேவைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மாலையில் 3 பெருமாளுக்கும், திருக்கச்சி நம்பிகளுக்கும் அலங்கார திருமஞ்சனமும், திருப்பாவை சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பூந்தமல்லி அருகே குமணன்சாவடி ஞானசுந்தர விநாயகர் கோயில் தர்மகர்த்தா பூவை ஞானம் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Tirukachi Varadaraja Peru Temple ,Putthamalli , 3 Karuta services at Thirukkachi Varatharaja Perumal Temple in Poonamallee
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...