×

தரைமட்டமான பஸ்நிலையங்களால் தவிக்கும் மக்கள், வியாபாரிகள் நெல்லையை உருக்குலைத்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்

* ஒரே நேரத்தில் நடக்கும் பணிகளால் நாள்தோறும் அவதி

* ஆண்டுக்கணக்கில் நடக்கும் பணிகளில் சுணக்கம்

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நெல்லையை அலங்கோலமாக்கிய பெருமை மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. நெல்லை மாநகரில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் பொதுமக்கள் நாள்தோறும் பல சிரமங்களை சந்திக்கின்றனர். முதலில் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த திட்டம் மாநகர் முழுவதும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பஸ்நிலையங்கள், காய்கனி சந்தைகள், விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள் என எவற்றையும் விட்டு வைக்காமல் உடைத்து தள்ளி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைத்து புழுதி காடாக மாற்றிவிட்டனர்.

மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி நெல்லை மாநகர ஸ்மார்ட் சிட்டி இணைக்கப்பட்டது. இது மாநில அரசு நிறுவனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ெசன்னை நிறுவன பதிவாளர் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 78.99 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மறு கட்டமைப்பு பணி இத்திட்டத்தில் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2018ல் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்கியது.

இதனால் பஸ்நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டது. பெரிய அளவில் அஸ்திவார பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இந்நிலையில் கடைகளை காலி செய்ய சிலர் மறுத்தனர். நீதிமன்றம் சென்று தடையானை வாங்கினர். தகுதியான மாற்று இடம் கோரி போர்க்கொடி தூக்கினர். இதனால் துவங்கிய  வேகத்தில் பணிகள் முடங்கின. அஸ்திவாரத்திற்கு குளம் போல் தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. சுமார் ஓராண்டு போராட்டத்திற்கு பின்னர் ஒருவழியாக உரிய அனுமதியுடன் பணிகள் கடந்த 2019 டிசம்பரில் துவக்கப்பட்டன.

புதிய பொலிவுறு பஸ் நிலையம் 3 அடுக்கு கொண்டதாக இருக்கும்.  ஆயிரத்து 629 இருசக்கர வாகனங்கள், 106 கார்கள் நிறுத்துமிடம், தரைத்தளத்தில் 27 பஸ்கள் நிறுத்துமிடம் மற்றும் 30 கடைகள், முதல் மற்றும் 2ம் தளங்களில் 114 கடைகள் மற்றும்  அவசர சிகிச்சை மையம், சிசிடிவி கேமரா, நகரும் படிகட்டுகள், மற்றும் லிப்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய மின்சக்தி, தொலைக்காட்சி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையம் பணி துவங்கிய நாள்முதல் மாநகர மக்கள் கடந்த 2018ல் இருந்து சொல்லமுடியாத துயரங்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். சந்திப்பு பஸ்நிலைய சுற்றுப்பகுதி முழுவதும் புளுதி மையமாக உள்ளது. சுருங்கிய உடைந்த சாலைகளால் பஸ்நிலையத்தை கடந்து ரயிலை பிடிக்க செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 2019ல் துவங்கப்பட்ட போதும் இரு கட்டமாக பணி மேற்ெகாண்டு 18 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஓராண்டுக்குள் பஸ்கள் செல்லும் வகையில் தரைத்தளம் மட்டும் திறக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

 ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த பஸ் நிலையம் மூடப்பட்டதும் இங்கு வந்து பயணிகளை ஏற்றிசென்ற நகர பஸ்கள் 3 வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது. பொருட்காட்சி மைதானம், சந்திப்பு தேவர் சிலை மற்றும் அண்ணா சிலை அருகே, வடக்கு பைபாஸ் சாலை செல்லப்பாண்டியன் பாலம் துவங்கும் பகுதி அருகே ஆகிய இடங்களுக்கு டவுன் பஸ்கள் இடம் பெயர்ந்தன.

சாலையோர இந்த பகுதிகளில் மக்கள் நிற்ககூட இடம் கிடையாது. மழை, வெயிலால் பாதிக்கின்றனர். மேலும் பஸ்நிலைய பகுதிகளுக்கு தொலை தூரம் நடக்கும் நிலை இப்போதும் நீடிக்கிறது. இந்த திட்டப்பணி 20 சதவீதம் கூட நிறைவேறாத நிலையில் அடுத்ததாக வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம் ஆகியனவும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இங்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிப்பு பணி அடுத்தடுத்து துவங்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் அருகே உள்ள ஆம்னி பஸ்நிலைய பகுதியிலும், பெருமாள்புரம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள இடத்திற்கும் மாற்றப்பட்டன.  இங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை என்பதால் இங்கு வரும் பயணிகளும், பொதுமக்களும் தினமும் பல்வேறு அவதிகளை சந்திக்கின்றனர். இதேபோல் பாளை பஸ்நிலையம் மூடப்பட்டதால் அதன் அருகே உள்ள சாலைகளில் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் நிற்கவும் சாலைகளை கடக்கவும் முடியாமல் தினமும் சிரமப்படுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் பஸ்நிலையங்களை இடித்து கட்டுவதோடு நிறுத்தப்படவில்லை. அடுத்த கட்டமாக காய்கனி சந்தைகள் பக்கம் மாநகராட்சி பார்வை சென்றது.

 நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டை இடித்து புதியதாக கட்ட அங்கு இருந்த வியாபாரிகளுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. அங்கும் பிரச்னைகள் எழுந்தன. கொதித்தெழுந்த வியாபாரிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், முற்றுகை என போராட்டங்களை தொடர்ந்த நிலையில் வழக்கும் தொடர்ந்தனர். அவர்களுக்கு பொருட்காட்சி மைதானம்., சாப்டர் பள்ளி மைதானம். டவுன் ஆர்ச் அருகே உள்ள கல்வி அலுவலக வளாகம் போன்றவை தற்காலிகமாக ஒதுக்கப்பட்டன.

 இங்கும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மழை பெய்தால் மிகுந்த சிரமத்தை வியாபாரிகள் சந்திக்கின்றனர். பொருட்காட்சி மைதானத்திலும் வர்த்தக வளாகம் கட்டுவதற்காக பெரும்பாலான பகுதிகளை சுற்றி வளைத்து பணியை தொடங்கி விட்டனர். இதனால் ஒதுக்குபுறமாக இருக்கும் தற்காலிக காய்கனி சந்தை கடைகளுக்கு நடந்து கூட செல்லமுடியா அளவிற்கு வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.

மேடுபள்ளமாக சகதி காடாக இருப்பதால் காய்கனிகளை பெரும்பாலும் தலைசுமையாக எடுத்து செல்கின்றனர். இவர்களது கோரிக்கைக்கும் தீர்வுகிடைக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக நெல்லை நயினார்குளம் சீரமைப்பு, பாளை நேரு சிறுவர் பூங்கா வளாகத்தில் அரங்கு மற்றும் வணிக வளாகம், சிறுவர் பூங்கா அமைப்பது, வஉசி மைதானத்தை இடித்து புதியதாக காலரிகள் கட்டுவது போன்ற பணிகளையும் அடுத்தடுத்து தொடங்கியுள்ளனர். இதனால் மாநகர பகுதியில் எங்கு திரும்பினாலும் மாநகராட்சி சொந்தமான பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய பணிகள் நடக்கின்றன.

ஒவ்வொரு பணியாக செய்து முடிக்காமல் ஒரே நேரத்தில் பணிகள் நடப்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் தினமும் தொல்லைகளை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு புதியதாக மலரும் ஆட்சிதான் தீர்வு காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நெல்லை மக்கள் உள்ளனர்.

பாதியில் நின்ற ரயில்வே பாலம்

பாளை அன்புநகர் ரயில்வே கிராசிங் பகுதியில் 7 சாலைகள் சந்திக்கின்றன. இங்கு ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு நெடுஞ்சாலைதுறைக்கு உரிய பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. மையத்தில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் இணைப்பு மட்டும் அமைக்க வேண்டும். இந்தபணியை இன்னும் நிறைவேற்றப்படாததால் புதியதாக கட்டிய பாலம் பயன்படுத்தாமலேயே பழசாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பணி ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஒருபுறம் மாநகரை கந்தலாக்கும் நிலையில் இந்த திட்டப்பணிகள் மட்டுமின்றி விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பெரிய மற்றும் சிறிய ரக குழாய்களை பதிப்பது போன்ற பணிகளையும் கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் செய்கின்றனர். இதனால் கட்டிடங்கள் மட்டுமின்றி சாலைகளும் சேதமாக்கப்பட்டுவிட்டன. பிரதான  சாலைகள் மட்டுமின்றி சிறிய சந்துபொந்துகளிலும் குடிநீருக்காக தோண்டப்பட்ட பகுதிகளில் தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல், புழுதி புயல் போன்ற பிரச்னைகளால் மாநகர மக்கள் அன்றாடம் சிரமப்படுகின்றனர்.

டிவைடர் வைத்து சிறிய சாலைகள் சுருக்கம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகு படுத்துவதாக சிறிய சாலைகளை சுருக்கும் பணி ஜோராக நடந்துள்ளது. பாளை ஆம்னி பஸ்நிலையம் அருகே தொடங்கும் பெருமாள்புரம் சாலையில் தொடங்கி அன்புநகர் வரை உள்ள  சாலை 40 அடி மட்டுமே அகலம் உடையது. இந்த சாலைகளில் இருபுறமும் ஏராளமான மரங்களும் உள்ளன. இந்த சாலையை இரண்டாக பிரித்து முழுவதும் டிவரைடர்களை வைத்து விட்டனர். மேலும் இப்பகுதியில் இருந்த மரங்களும் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்டு விட்டன. ஒரு சில மரங்கள் மட்டும் அருகே உள்ள வேய்ந்தான்குளக்கரை மற்றும் பஸ்நிலைய  வளாக பகுதிகளில் நடப்பட்டன. பெருமாள்புரம் பகுதியில் தற்போது தற்காலிக பஸ்நிலையமும் செயல்படுவதால் இந்த சுருக்கப்பட்ட சாலைகளில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

 இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிட்டது. நடந்து செல்பவர்களுக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படுவதால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்துவிட்டன. 90 அகல சாலைகளில் மட்டுமே டிவடைர்கள் வைக்கவேண்டும் என்ற நியமதி உள்ள நிலையில் 40 அடி சாலையை சுருக்கி மக்களை வேதனை படுத்துவதுடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியையும் வீணடிக்கின்றனர் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாயமாகும் சாலை மிரர்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து சாலைகளின் ஓரங்கள் மற்றும் மையதடுப்புகள் உள்ள பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் விசிறி போன்று சாலை ஓட்டிகளுக்கான மிரர்களை பொருத்தினர். இந்த டிவடைர்கள் மிக குறுகிய இடைவெளியில் பல பகுதிகளில் அமைக்கப்பட்டன. இவற்றில் பல தற்போது மாயமாகி வருகின்றன.

கூடுதல் சாலை கிடைக்கவில்லை

மாநகரில் இருக்கிற சாலைகளை உடைப்பது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று சாலை திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சிக்கு மனம் வரவில்லை. குறிப்பாக வண்ணார்பேட்டையில் இருந்து பாளை வரை முருகன்குறிச்சி சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் செல்லப்பாண்டியன் பாலம் துவங்கும் இடத்தில் இருந்து பாளை நேரு சிறுவர் பூங்கா எதிரே வரை இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தடைகளை தகர்த்து திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பர ரகசியத்தில் ஆற்று மணல்

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பழைய பஸ்நிலையத்தில் அஸ்திவாரத்திற்காக குழி தோண்டிய போது தங்கத்தின் நிகரான மதிப்பு மிக்க ஆற்று மணல் கிடைத்தது. தோண்டத்தோண்ட கிடைத்த ஆற்றுமணல் இரவோடு இரவாக லாரிகளில் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆற்று மணல் எங்கே சென்றது என கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணகை–்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு என்பவரால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல் ஆணையம் சார்பில் பஸ் நிலைய கட்டமான பணியின் போது எடுக்கப்பட்ட மணலில் 90 சதவீதம் தாமிரபரணி ஆற்று மண் என்ற ஆய்வு அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு குழு வந்து ஆய்வு செய்ததுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் நிலை உள்ளது.

Tags : Central and state governments have been credited with messing up Nellai in the name of a smart city. In the city of Nellai
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...