தேர்தலையொட்டி 3 நாள் டாஸ்மாக் விடுமுறை எதிரொலி மது பதுக்கிய 4 பேர் கைது 240 பாட்டில்கள் பறிமுதல்-முத்துப்பேட்டை பகுதியில் போலீசார் அதிரடி

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை பகுதியில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைதாயினர்.நாளை (6ம்தேதி) நடைபெற இருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும், நேற்று முதல் 3 தினங்கள் விடுமுறை அளிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறையை சாதகமாக பயன்படுத்தி அனுமதியில்லாமல் கூடுதல் விலைக்கு விற்க முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிவட போலீசார் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை, மங்கலூர், செங்காங்காடு, கோவிலூர் ஆகிய பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தம்பிக்கோட்டை எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் அருண் பாண்டியன்(30), மங்கலூர் கணேசன் மகன் மாரிமுத்து(40) செங்காங்காடு வைரப்பன் மகன் இந்திரன்(55), கோவிலூர் வடகாடு வீராச்சாமி மகன் வீரமணி(35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: