கீழ்வேளூர் பகுதியில் உளுந்து, பச்சை பயறு அறுவடை மும்முரம்

கீழ்வேளூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதியில் சம்பா, தாளடி அறுவடைக்கு பின் நெல் தரிசு வயலில் உளுந்து, பச்சை பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டு தோறும் ஜனவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நெல் அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அறுவடைக்கு பின்போ வயலில் சேறு மெழுகு பதத்தில் அதாவது விதைகள் சேற்றில் பதியும் பக்குவத்தில் விதைக்கப்படும்.

70 நாள் வயதுடைய உளுந்து, பயறு பயிர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் தெளித்தால் மார்ச் மாதம் மிதமான தென்றல் காற்றில் நல்ல மகர்ந்த சேர்க்கை நடைபெற்று அதிக காய்கள் காய்க்கும். பொதுவாக விதை, விதைப்பு மற்றும் அறுவடை செலவை தவிர வேறு எந்த செலவும் இல்லாமல் குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைப்பதால் உளுந்து, பச்சை பயிர்கள் பணப்பயிராக கருதப்பட்டது. ஆனால் தற்போது விதைக்கும் போது மருந்து கலந்து விதைப்பது, செடி நன்றாக தளைத்து வளரவும், பூக்கள் அதிகளவில் பூக்கவும் மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு மழை ஜனவரி 15ம் தேதி வரை பெய்து அந்த தண்ணீர் வடிந்த பின் 25தேதிக்கு பின் உளுந்து, பச்சை பயறு விதைக்கப்பட்டது. விதைக்கப்பட்ட பின் மழை பெய்யாததால் செடிகள் நன்றாக வளராமலும், பூக்காமலும் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாரான உளுந்து, பயறு வகை பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது.

இந்தாண்டு மழை இல்லாததாலும், பூச்சி தொல்லையாலும் காய் பிடிக்காமல் மகசூல் குறைந்து விட்டது. இதனால் மகசூலை விடஅறுவடை செலவு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொருளாளர் புருஷோத்தமதாஸ் கூறுகையில் இந்த ஆண்டு உளுந்து, பச்சை பயறு பயிர்கள் மழை காரணமாக சுமார் 15 நாட்களுக்கு மேல் கால தாமதமாக விதைக்கப்பட்டது. விதைத்த நாளிலிருந்து அறுவடை நாள் வரை மழையே பெய்யாமல் உள்ளது. வளர்ந்து பூக்கும் நேரத்தில் புருட்டானியா புழு தாக்குதல் ஏற்பட்டு இலை, காய்கள் முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் செடி உள்ள அளவிற்கு பூத்து காய்க்க வில்லை.

செடி தளைக்க, பூக்க மருந்துகள் அடித்தும் மழை பெய்யாததால் செடிகள் காய்கள் காய்க்காமல் உள்ளது. அறுவடைக்கு தயாரான உளுந்து, பச்சை பயிறு செடியை அறுவடை இயந்திரம் கொண்டு வாடகையாக ஒரு மணிநேரத்திற்கு ரூ.2,000 கொடுத்து அறுவடை செய்தால் ரூ.1,000த்திற்குதான் மகசூல் உள்ளதால் அறுவடை செலவுக்கு கூட உளுந்து, பச்சை பயறு பயிர்கள் மகசூல் இல்லாமல் உள்ளது. வயலில் ரசாயண உரம் இல்லாமல் இயற்கை உரம் இருந்தப்போது பணப்பயிரான உளுந்து, பச்சை பயிறு பணப்பயிராக இருந்தது. இப்போது ரசாயண உரம் பயன் படுத்துவதால் விவசாயகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Related Stories:

>