நாளை வாக்குப்பதிவு அச்சமின்றி வாக்களிக்க முன்னேற்பாடுகள் தீவிரம்-மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி, பாதுகாப்புடன் வாக்களிக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர்கள் தினேஷ் சிங்,(தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி), கமால் ஜஹான் லக்ரா (பாலக்கோடு, பென்னாகரம்), பங்கஜ் (அரூர்), சக்கிராலா சாம்பசிவராவ் (காவல் பார்வையாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகளில், நாளை (6ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி 870 மையங்களில் 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, வாக்குச்சாவடி அலுவலர் நிலை 2, வாக்குச்சாவடி அலுவலர் நிலை 3 ஆகிய நிலைகளில் நான்கு பேர் வீதம் 7268 பணியாளர்கள் வாக்குப்பதிவின், தேர்தல் பணி மேற்கொள்ள பணியமர்த்தப்பட உள்ளனர். 20 சதவீத கூடுதல் பணியாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பதற்றமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், 149 நுண் பார்வையாளர்கள் பணியாற்ற உள்ளனர். அதுமட்டுமன்றி 20 சதவீத நுண் பார்வையாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பதிவு செய்யப்படும். கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 3634 நபர்கள் பணியமர்த்தபட உள்ளனர்.

மேலும், 10 சதவீத கூடுதல் பணியாளர்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 146 மருத்துவ அலுவலர்கள், 146 சுகாதார ஆய்வளர்கள் என 500க்கு மேற்பட்ட மருத்துவ அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் பணிபுரிய  கணினி மூலம் சுழற்சி முறையில், வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் 25, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 23 இதர வாகனங்கள் என 48 வாகனங்கள் மருத்துவ பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அனைத்து வாக்குச்சவடிகளுக்கும், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாக்களர்களுக்கு எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்ய அனைத்து முன்னேற்பாடு  நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராமமூர்த்தி, தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாச்சலம் (பென்னாகரம்), முத்தையன் (அரூர்), சாந்தி (பாலக்கோடு), நாசீர் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நரேந்திரன், (பொது) நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>