திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு 8 தொகுதிகளில் 20.77 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்-விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 8 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையொட்டி, 2,885 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடுகள் இறுதிகட்டத்தை அடைந்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் 2,885 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 10,17,322 ஆண்கள், 10,60,026 பெண்கள், 92 திருநங்கைகள் உள்பட மொத்தம் 20,77,440 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

அதையொட்டி, அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வீடு, வீடாக வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள், ஒப்புகை ரசீது இயந்திரங்கள், பதிவேடுகள், கொரோனா பரவல் தடுப்பு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இன்று அனுப்பப்படுகிறது.

அதற்காக, 180 மண்டல அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனித்தனி வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும், சராசரியாக 12 முதல் 15 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் 240 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்தல் பணி வாக்குச்சாவடி அலுவலர்களாக 14 ஆயிரம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஏற்கனவே 3 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக, 3வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்த மையங்களில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரம் அப்போது தெரியவரும்.

பணி நியமன ஆணைகள் பெற்றதும், பகல் 2 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்துள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்களை இன்று இரவு தயார்படுத்தி வைக்கவும், நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, உணவு இடைவேளை இல்லாமல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், வாக்காளர்களுக்கான வரிசையில் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை தூய்மை செய்தல், கையுறை அணிதல், காய்ச்சல் பரிசோதனை போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>