×

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், 6.29 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்: சத்யபிரதா சாகு பேட்டி

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் பேட்டியளித்துள்ளார். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்கள் மாலையில் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்யலாம். 4,17,521 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில் நாளை 6,28,69,955 பேர் வாக்களிக்க உள்ளனர். 3,09,23,651 ஆண் வாக்காளர்களும் 3,19,39,112 பெண் வாக்காளர்களும், 7,192 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. 88,937 வாக்குச்சாவடிகளில் 46,203 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும். பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஊபரில் இலவச வாகன சேவை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த 1,04,282 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 1,03,202 மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த 28,531 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 28,159 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு 30 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு 28 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன.

Tags : Tamil Nadu ,Satyapratha Saku , Satya Pradha Saku
× RELATED வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி