கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்..!!

லக்னோ: உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிராக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். அத்துடன் மக்கள் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.லக்னோவில் உள்ள சிவில் மருத்துவமனையில் யோகி ஆதித்யநாத்திற்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, தடுப்பூசியை இலவசமாக கிடைக்க செய்த பிரதமர் மோடிக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் உள்ள விஞ்ஞானிகளுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. வாய்ப்பு வழங்கப்படும் போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>