வாக்காளருக்கு பணம் தர முயன்ற பா.ம.க.வினர் கைது: அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

வேலூர்: அணைக்கட்டு தொகுதியில் வாக்காளருக்கு பணம் தர முயன்ற பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூரை சேர்ந்த பா.ம.க முன்னாள் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், சதீஷ் மற்றும் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையில் நிற்காமல் சென்ற காரை வேலூர் மக்கான் சந்திப்பு அருகே மற்றொரு பறக்கும் படை மடக்கி பிடித்தது. ரூ.4 லட்சம் பணம், அதிமுக வேட்பாளரின் மாதிரி வாக்குச்சீட்டுகளுடன் நள்ளிரவில் காரில் சென்றது அம்பலமாகியுள்ளது. 3 பேரிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடத்திய பிறகு காலையில் கைது செய்யப்பட்டனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற புகாரில் அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் வேலழகன் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

நேற்று நள்ளிரவு அதிமுகவை சேர்ந்த வேலழகனின் ஆதரவாளர்களும், கூட்டணி கட்சியினரும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே பாமக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான ஒரு கார் நிற்காமல் சென்றதை அடுத்து அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் பின் தொடர்ந்து வந்தனர். மேலும் இதுகுறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மக்கான் சந்திப்பு அருகே அந்த காரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். இதில் ரூ.4 லட்சம் ரொக்க பணமும், மாதிரி வாக்குச்சீட்டு, பாமகவினர் துண்டுகள் மற்றும் அவர்களின் கட்சியின் துண்டு பிரசுரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>