×

தேசிய மகளிர் ஒருநாள் போட்டி 12வது முறையாக ரயில்வேஸ் சாம்பியன்

ராஜ்கோட்: தேசிய சீனியர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், மித்தாலி ராஜ் தலைமையிலான ரயில்வேஸ் அணி 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், ரயில்வேஸ் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவரில் 167 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திராணி ராய் அதிகபட்சமாக 49 ரன் விளாசினார். துர்கா முர்மு 31, நிஹாரிகா 39* ரன் எடுத்தனர். ரயில்வேஸ் பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 3, மேஹனா சிங், ஏக்தா பிஷ்ட் தலா 2, ஸ்வாகதிகா, பூனம் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணி 37 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து எளிதாக வென்றது. மேஹனா 53 ரன், பூனம் ராவுத் 59, மோனா 19*, ஸ்நேஹ் ராணா 34* ரன் எடுத்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ரயில்வேஸ் அணி 12வது முறையாக தேசிய சீனியர் மகளிர் ஒருநாள் டிராபியை முத்தமிட்டது. இந்த தொடர் மொத்தம் 14 முறை நடந்துள்ளதில், ரயில்வேஸ் 2 முறை மட்டுமே பட்டம் வெல்லத் தவறியது குறிப்பிடத்தக்கது.


Tags : National Women's ODI , Railways champion for the 12th time in the National Women's ODI
× RELATED தேசிய மகளிர் ஒருநாள் போட்டி 12வது முறையாக ரயில்வேஸ் சாம்பியன்