கோவை கரும்புக்கடையில் பிரசாரம் அமைச்சர் வேலுமணி விரட்டியடிப்பு: அதிமுக-திமுகவினர் மோதல்; 11 பேர் காயம்

கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தின் போது வாக்கு சேரிக்க வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அப்பகுதி மக்கள் விரட்டியடித்ததால், அதிமுக-திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் திமுகவினர் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அதே பகுதியில் அதிமுகவினர் பிரசாரம் செய்ய வந்துள்ளனர். இதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தனது இறுதிகட்ட பிரசாரத்தில் இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கரும்புக்கடை சாரமேடு பகுதிக்கு வந்தார்.

அவரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் எஸ்.பி.வேலுமணியே வெளியே போ என்றும், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இங்கு வாக்கு கேட்க வந்தீர்களா? என்றும் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர். அவரின் வாகனத்தையும் முற்றுகையிட்டனர். மேலும், அங்கிருந்த சிலர் `வேலுமணி தோத்தாச்சு, வேலுமணி தோத்தாச்சு’ என முழக்கமிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த எஸ்.பி.வேலுமணி அங்கிருந்து சென்றுவிட்டார்.இதையடுத்து, அங்கிருந்த அதிமுக, திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த திமுக தொண்டர் அணி அமைப்பாளர் நவுசாத் (40), வார்டு பொறுப்பாளர் பஷீர் (44), சாகிரா பேகம் (40), பாரிஜான் (42) ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதே போல், அதிமுக தரப்பில் 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிறிது நேரத்தில் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஆகியோர் அதிமுகவினரால் தாக்கப்பட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், சிடிசி ஜப்பார் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கரும்புக்கடை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>