×

பொய்யான விளம்பரம் மூலம் மக்களை திசை திருப்ப முடியாது அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்: இறுதிகட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பொய்யான விளம்பரம் மூலம் மக்களை திசை திருப்ப முடியாது என்றும் அதிமுகவுக்கு தக்க பதிலடியை வரும் தேர்தலில் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நேற்று மாலை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவிகள், சிறுவர், சிறுமியர், பெண்கள் அவருடன் நின்று செல்பி எடுத்து கொண்டனர். இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். திமுக தேர்தல் அறிக்கையில 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றை நிறைவேற்றினால் தமிழகம் ஒளிமயமானதாக அமையும். தமிழ்நாட்டின் எதிர்காலம் வண்ண மயமானதாக மாறும். அப்படி மாற்றிக் காட்டுவதற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள்.

 சென்னை மாநகரத்தின் மேயராக-உள்ளாட்சித் துறை அமைச்சராக - தொழில்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்து ஏராளமான மக்கள் சேவையை ஆற்றி வந்தவன் என்கின்ற பெருமிதத்தோடு நான் கேட்கிறேன். இந்தத் தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞருடைய மகனாக நான் கேட்கிறேன். உங்களுக்கு உழைக்கக் காத்திருக்கும் உங்களில் ஒருவனாக நான் கேட்கிறேன். உங்களுக்கு உழைக்க எனக்கு ஆணையிடுங்கள். கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக மக்கள் கிராம சபைகளைக் கூட்டி மக்களைச் சந்தித்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ - என்கிற நிகழ்வின் மூலமாக மக்களைச் சந்தித்தேன். உலகின் மாபெரும் பேரிடரான கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ என்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலமாக மக்களைச் சந்தித்தேன். புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன்.

கடந்த மார்ச் 15ம் தேதி கலைஞர் பிறந்த திருவாரூரில் நான் என்னுடைய தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன். இன்றைக்கு நான் போட்டியிடுகிற நம்முடைய கொளத்தூரில் என்னுடைய பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்கிறேன்.தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், இந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசி இருக்கிறேன். 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறேன். போகிற இடங்களிலெல்லாம் தினமும் - ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கிறேன். இந்த ஆட்சிக்கு எதிரான மக்களின் கோப அலையை சுனாமியாகப் பார்க்கிறேன்.இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி எப்போது? இந்த கொத்தடிமைக் கும்பலை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள்? இந்தக் கொள்ளைக்கூட்டம் சிறைக்குப் போவது எப்போது என்றுதான் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

 தமிழகத்தைக் கூறுபோட்டு விற்க நினைக்கும் பாஜவுக்குப் பக்கத் துணையா, அடிமையாக இருக்கிறது பழனிசாமி அரசு. மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்துக்கும் தலை யாட்டிக் கொண்டு பாஜகவின் கொல்லைப்புற அரசாங்கத்தை முதல்வர் பழனிசாமி நடத்தினார். அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, பாஜக தமிழினத் துரோகத் திட்டங்களைத் தடையின்றி அமல்படுத்தியது. மொத்தத்தில் இது, அ.தி.மு.க.வை முகமூடியாகப் போட்டுக் கொண்ட பா.ஜ. அரசுதான். இப்படி மக்களாட்சியைக் கடந்த ஐந்தாண்டுகளாகக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டு இருந்தார்கள். தமிழகத்தை ஐம்பது ஆண்டு காலம் பின்னோக்கி வேகமாகப் போக வைத்த அரசுதான், அதிமுக அரசு. தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் திமுகவிடம் உள்ளது. ரெய்டு நடத்தினால்தான் திமுக தொண்டனுக்கு உணர்ச்சி கூடும். பயந்து போய் வீட்டுக்குள் முடங்க நாங்கள் பழனிசாமியோ பன்னீர்செல்வமோ அல்ல. இதுபோன்ற பூச்சாண்டி வேலைகளை வேறு எங்கேயாவது வைத்துக்கொள்ளுங்கள்.

 தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு பொய்யான ஒரு விளம்பரத்தை கொடுத்து அதிமுகவினர் மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள். அது ஒருக்காலும் நடக்காது. உங்களுக்கு தக்க பதிலடியை வரும் ஆறாம் தேதி மக்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  என்னுடைய லட்சியம் என்பது, வளமான தமிழகம் - வலிவான தமிழகம் - வறுமை ஒழிந்த சமத்துவத் தமிழகம் - சுயமரியாதைத் தமிழகம். அந்த இலட்சியப் பாதையை நோக்கிச் செல்வதற்கு வலுச்சேர்த்திட உங்களுடைய உறுதுணையை என்றும் வேண்டுகிறேன். மக்களுடைய கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதற்கான அத்தாட்சி ஆவணத்தையும் உங்களிடம் நான் வழங்கியிருக்கிறேன். திமுகவிற்கும்-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிப்பதன் மூலமாக, தமிழ்நாட்டு மக்கள் தங்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 ஏப்ரல் 6ம் நாள் உங்கள் கையில் உள்ள அரசியல் அதிகாரத்தை அதிமுகவுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள். பத்தாண்டு காலத்தில் தமிழகத்தைப் பாழ்படுத்திய அரசியல் கயவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆயுதம் உங்கள் கையில் தான் இருக்கிறது. அந்த ஆயுதத்தின் மூலமாக அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மு.க.ஸ்டாலின் ஆகிய நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான தமிழ்நாட்டை நாளை அமைப்போம். தந்தை பெரியாரின் பெயரால் கேட்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் கேட்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் கேட்கிறேன். ஆதரிப்பீர் உதயசூரியன். ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை. உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னங்களுக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்து முழுமையான வெற்றியைத் தாருங்கள்.

 ஆட்சி அமைக்கப் போவது திமுக தான். எனவே சிதறாமல் உங்களது வாக்குகளை வழங்குங்கள். வாக்குகளை வீணடித்துவிடாதீர்கள். வெற்றிச்சின்னமாம் உதயசூரியனுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் அளிப்பீர். தி.மு.க. எப்போதும்-சொன்னதைச் செய்தது; செய்வதை மட்டுமே சொன்னது.  தமிழக மக்களே, ஏப்ரல் 6 தமிழகத்தின் பத்தாண்டுகால ஏக்கம் தீரும் நாள். மே 2 - தமிழகத்தின் மாபெரும் வளர்ச்சியின் தொடக்க நாள். கொளத்தூர் அகரத்தில் நின்று சொல்கிறேன், நிச்சயம் கழகம் சிகரத்தைத் தொடும். திமுக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும். நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார். பத்தாண்டு காலத்தில் தமிழகத்தைப் பாழ்படுத்திய அரசியல் கயவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆயுதம் உங்கள் கையில் தான் இருக்கிறது. அந்த ஆயுதத்தின் மூலமாக அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

Tags : MK Stalin , People cannot be misled by false advertising To retaliate against the superpower People are ready: MK Stalin's speech in the final campaign
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...