×

அனிதா குரலில் போலி வீடியோ பதிவு அமைச்சர் பாண்டியராஜன் மீது அரியலூர் எஸ்பியிடம் புகார்: சகோதரர் வழங்கினார்

சென்னை: நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா அதிமுக அரசை ஆதரித்து பேசுவது போன்ற வீடியோ அமைச்சர் பாண்டியராஜன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதற்கு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா, அதிமுக அரசை ஆதரித்து பேசுவது போன்று வீடியோ அமைச்சர் பாண்டியராஜனின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல்வேறு தரப்பினரும் இந்த வீடியோ பதிவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதேபோல், மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோ பதிவில் மணிரத்னம் பேசியிருப்பதாவது: தங்கை அனிதாவை வைத்து ஒரு வாய்ஸ் எடிட் செய்து வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். அதில், அனிதா நீட் தேர்வை ஆதரிப்பது போன்று கேவலமான ஒரு வேலையை செய்துள்ளீர்கள். நீங்கள் ஆர்.எஸ்.எஸ் சனாதான பயிற்சி பெற்றவர்கள் என்பதால் கண்டிப்பாக இதை செய்வீர்கள். ஜெயலலிதாவின் உடலையே உருவகமாக செய்து ஓட்டுக்கேட்டவர்கள் தானே நீங்கள். உங்களிடம் நாங்கள் எதை சொல்ல முடியும்?. மிகவும் மோசமானவர் என்பதை நிரூபணம் செய்துள்ளீர்கள். மாநிலங்கள் அவையில் நீட்டை எதிர்த்து வாக்களித்திருந்தால் நீட் என்ற ஒன்றே வந்திருக்காது.

ஆனால், நீங்கள் அப்படி செய்யவில்லை. இது தான் நீங்கள் செய்த முதல் துரோகம். அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் நீட்டை எதிர்த்து போராடுவதாக நாடகமாடினீர்கள். மாணவர்களை நம்பவைத்து அவர்களின் முதுகில் குத்துனீர்கள். நீட் எதிர்ப்பு அடையாளமாக இருக்கும் அனிதாவை கொச்சைபடுத்தும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். தயவு செய்து வீடியோவை நீக்கி விடுங்கள்.இவ்வாறு தன்னுடைய வீடியோ பதிவில் கூறியுள்ளார்.இந்த வீடியோ பதிவு வெளியிட்ட ஒருசில நிமிடங்களில் அமைச்சர் பாண்டியராஜனின் டிவிட்டர் பக்கத்தில் இருந்த மாணவி அனிதாவின் வீடியோவும் உடனடியாக நீக்கப்பட்டது. பின்னர், இதற்கு பதிலளித்து அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட டிவிட்டர் வீடியோ பதிவு:இன்று காலை எனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீட் குறித்து ஒரு பதிவு போடப்பட்டுள்ளது.

இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த பதிவு வந்திருக்கிறது. இது எப்படி வந்தது என்று கண்டறிந்து அதை செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் போலீசாரிடம் புகார் கொடுக்கப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவமதிப்பு செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது. கண்டிப்பாக இதை பதிவு செய்தவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.அரியலூர் எஸ்.பி பாஸ்கரனிடம் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, கொள்கை பரப்பு செயலாளர் பெருநற்கிள்ளி, அரியலூர் தேர்தல் பொறுப்பாளர் அமரமூர்த்தி ஆகியோர் நேற்று புகார் அளித்தனர்.
அதில் கூறியருந்ததாவது: அனிதா 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட்தேர்வு காரணமாக மருத்துவராக வேண்டும் என்ற கனவு சிதைந்தது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். என் தங்கையின் போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராகவும், அது ஏழை மக்களை எவ்வாறு பாதிக்கும் என்று கண்டனங்கள் தெரிவித்ததை தமிழக மக்கள் அறிவார்கள்.

அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பாண்டியராஜன் இறந்து போன என் தங்கை அனிதா பேசுவதாக சித்தரித்து தவறான வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது இந்திய தண்டனை சட்டத்தின் 2000ன்படி குற்றமாகும். அவர் பதிவிட்ட அந்த வீடியோவை அனிதா போராட்டத்தையும், இறப்பையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
இது அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக எங்கள் குடும்பத்தினரின் சம்மதமின்றி அனிதா படம் வீடியோவை பயன்படுத்தி உள்ளார். வாக்காளர்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் தந்துள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

Tags : Ariyalur SP ,Pandiyarajan ,Anita , Fake video recording in Anita's voice On Minister Pandiyarajan Complaint to Ariyalur SP: Brother filed
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு