×

சொன்னாரே செஞ்சாரா....விவசாயிகளை மறந்த எம்எல்ஏ: உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதி உடுமலை சட்டமன்ற தொகுதி. இத்தொகுதியில் உடுமலைப்பேட்டை நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 57 ஊராட்சிகள் அடங்கும். இதுவரை 15 சட்டமன்ற தேர்தலை சந்தித்த தொகுதியாக இத்தொகுதி உள்ளது. 2001-ம் ஆண்டில் இருந்து இத்தொகுதியில் அதிமுகவே வென்றிருக்கிறது. இத்தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ.வாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளார்.இத்தொகுதியில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலைகள், காற்றாலைகள் போன்றவை பிரதான தொழில்களாக உள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பது இத்தொகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. ஆனால், இத்தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகளை வேதனைப்படுத்தியுள்ளது.

பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க, ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதும் விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதையும், இத்தொகுதி எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை. உடுமலை தொகுதி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், இதையும் எம்எல்ஏ உடுமலை ராதாகிருஷ்ணன் கண்டுகொள்ளவில்லை.இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. மூலப்பொருள் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி வரி போன்ற பல்வேறு காரணங்களால் நூற்பாலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆனால், இத்தொழில் மேம்பாட்டுக்கு இத்தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எதையுமே செய்யவில்லை என்பது பெரும் அதிருப்தியாக உள்ளது.

மறுசுழற்சி செய்யப்படும் தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு வேண்டும் என்பது தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை. இதுவும் நிறைவேற்றப்படவில்லை. தேங்காய் நார் சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம் இருப்பதால், இதனை மேம்படுத்த வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் கோரிக்கை. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்களை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. விவசாயிகள், தொழில்துறையினர், தேங்காய் வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், இத்தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எண்ணற்ற திட்டங்கள்
உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கூறுகையில்,``முகில்தொழுவு, கோழிக்குட்டை போன்ற பல்வேறு இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன, ஜமீன் ஊத்துக்குளியில் கழிவுநீர் வாய்க்கால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளேன்’’ என்றார்.

வளர்ச்சி பணிகள் நிலுவை
கடந்த முறை வெற்றிவாய்ப்பை இழந்தவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.க.முத்து கூறுகையில்,``உடுமலை தொகுதியில் எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர் ராதாகிருஷ்ணன் 5 வருட காலமாக அமைச்சராக இருந்துள்ளார். இந்த பதவியை பயன்படுத்தி, தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்திருக்கலாம். ஆனால், இவர் எதையுமே செய்யவில்லை. அதனால், இத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்’’ என்றார்.



Tags : Senchara ,MLA ,Udumalai Radhakrishnan , Senchara .... MLA who forgot farmers: Udumalai Radhakrishnan MLA
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா