மேற்குவங்க மாநில பிரசாரத்திற்காக மோடி விவிஐபி விமானத்தை பயன்படுத்தலாமா?.. தேர்தல் ஆணையத்திடம் காங். தலைவர் புகார்

கொல்கத்தா: தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, விவிஐபி விமானத்தை பயன்படுத்தலாமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆணைத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்குவங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 31 தொகுதிகளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, முதல்வர் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, மேற்குவங்க காங்கிரஸ் மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய கடிதத்தில், ‘மேற்குவங்கத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் 6ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் நிலையில், கடந்த 3ம் தேதி (நேற்று) பிரதமர் மோடி ஹூக்ளி மற்றும் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் மேற்குவங்க அரசியல் பேரணிகளுக்கு விவிஐபி விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த விவிஐபி விமானங்களை பொறுத்தமட்டில் பிரதமரின் பாதுகாப்பு கருதி அவரது உத்தியோகபூர்வ நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போதும், அவர் விவிஐபி விமானங்களை பயன்படுத்துகிறார். விவிஐபி விமானத்தை பொறுத்தமட்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக பயன்படுத்தலாம். ஆனால், அரசியல் கூட்டங்களில் அந்த விமானத்தை பயன்படுத்தமுடியுமா? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதே மற்ற அரசியல் தலைவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது கட்சியின் தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கப்படுகிறது. மேலும் பிரதமரின் மேற்குவங்க பயணத்தால் நான் சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. எனது முன்கூட்டிய திட்டமிடப்பட்ட அரசியல் பிரசார திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. பிரதமரின் வருகைக்காக மற்ற தலைவர்களின் பிரசார திட்டங்களை முடக்க வேண்டுமா? என்பது எனக்கு தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>