கல்வராயன்மலையில் கூடுதல் எஸ்பி ரெய்டு: 7600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையில் கூடுதல் எஸ்பி தலைமையில் நடந்த சாராய ரெய்டில் 7600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட எஸ்பி ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்புராயன் தலைமையில் மதுவிலக்கு டிஎஸ்பி பிரகாஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் (மகளிருக்கான குற்ற தடுப்பு), பிரபாவதி (கள்ளக்குறிச்சி மதுவிலக்கு), காமராஜ் (கச்சிராயபாளையம்), ராஜதாமரைபாண்டியன் (சைபர் கிரைம்), பாண்டியன் (திருக்கோலிலூர் மதுவிலக்கு), ராமச்சந்திரன்,

கரியாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அடங்கிய குழுவினர் தனித்தனி குழுவாக பிரிந்து மேல்தேவனூர், ஆலத்தி, தாழ்கெண்டிக்கல், மல்லிப்பாடி, நாரணாம்பட்டி, தேக்கம்பட்டு, சின்ன திருப்பதி உள்ளிட்ட இடங்களில் சாராய ரெய்டு செய்தனர். அப்போது மேல்தேவனூரில் 2000 லிட்டர் சாராய ஊறல், ஆலத்தியில் 1200 லிட்டர் சாராய ஊறல், தாழ்கெண்டிக்கல் பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறல், மல்லிகைப்பாடியில் 1800 லிட்டர் சாராய ஊறல், நாரணாம்பட்டியில் 1000 லிட்டர் சாராய ஊறல், தேக்கம்பட்டில் 800 லிட்டர் சாராய ஊறல், சின்னதிருப்பதியில் 400 லிட்டர் என 7600 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும், சாராய ஊறல் வைத்திருந்த பேரல்களையும் கொடுவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.இதுதொடர்பாக தாழ்வெள்ளார் வெங்கடேசன், மொட்டையனூர் அண்ணாமலை, மேல்கெண்டிக்கல் குமார், மல்லிகைப்பாடி ராஜேஷ், நாரணாம்பட்டி தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதோ, விற்பதோ சட்டப்படி குற்றமாகும். இனிவரும் காலத்தில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>