×

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான குடோனில் ரூ91.56 லட்சம் பறிமுதல்: 22 பேர் சுற்றிவளைப்பு; நள்ளிரவில் நடந்த பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான சரக்கு குடோனில் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ₹91 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதுடன், 22 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து ைகது செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மேலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படைகள், நிலை கண்காணிப்புக்குழுக்கள், சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள், தகவல் வரும் இடங்களில் அதிரடி ரெய்டு போன்றவை நடத்தப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான சரக்கு குடோனில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் ஆற்காடு வேளாண் உதவி இயக்குனர் அலுவலக வேளாண் அலுவர் ராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழு மற்றும் ராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி தலைமையிலான போலீசார் ராணிப்பேட்டையில் இருந்து வானாபாடி செல்லும் சாலையில் 3 கி.மீ தூரத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான சரக்கு குடோனில் அதிரடியாக நுழைந்தனர். அங்கு கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கைப்பற்றினர். முதலில் கட்டு, கட்டாக வைக்கப்பட்டிருந்த ₹86 லட்சமும், தொடர்ந்து சில்லரைகளாக வைக்கப்பட்டிருந்த பணம் எண்ணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ₹91 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் அங்கிருந்து கைப்பற்றப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பணம் வினியோகம் உட்பட தேர்தல் பணி செய்வதற்காக பதுங்கியிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 22 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடோனில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இங்கு இன்னும் கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்பதால் பறக்கும் படை குழுவினர் குடோனை சல்லடை போட்டு அலசி வருகின்றனர். இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Army Assembly Module ,Gudon , 91.56 lakh seized from AIADMK candidate in Ranipettai assembly constituency: 22 arrested; The commotion that took place at midnight
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...