×

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி இருக்கும் நெல் மூட்டைகள்

* மழை பெய்தால் முழுவதும் நாசமாகும் அபாயம்
* பணமும் வரவு வைக்காததால் விவசாயிகள் கவலை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் எடை போடாமல் திறந்தவெளியில் வைத்துள்ளனர். இதனால் மழை பெய்தால் முழுவதும் நனைந்து நாசமாகி போய் விடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா, மட்டை, ஆடுதுறை 45, குளிஅடிச்சான், சித்திரைகாரி, புதியரகமான கோ 51, அண்ணா 4 போன்ற ரக நெல் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டது. நல்ல மகசூல் கிடைத்த நெல் கதிரை விவசாயிகள் கடந்த டிசம்பர் கடைசி முதல் மார்ச் முதல் வாரம் வரை அறுவடை செய்தனர். நெல்லிற்கு வெளிமார்க்கெட்டில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ராமநாதபுரம், ஆர்எஸ்.மங்கலம், ஆனந்தூர், நயினார்கோயில், மங்கலக்குடி, பெரியகீரமங்கலம், நயினார்கோயில், பரமக்குடி, பார்த்திபனூர், செல்வநாயகபுரம், திருவரங்கம், கமுதி, கடுகுசந்தை, திருஉத்திரகோசமங்கை உள்ளிட்ட 20 இடங்களிலும், கூடுதல் வசதிக்காக அருகிலுள்ள சில கிராமங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக நெல் ஏ கிரேடு ரகங்கள் கிலோ ஒன்றிற்கு ரூ.19.58 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. வெளி மார்க்கெட் வியாபாரிகளை காட்டிலும் நெல் ரகம், தரத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.600 வரை கூடுதலாக அரசு வழங்குவதால் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்று வந்தனர்.

கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட எடை மட்டுமே அளவீடு செய்யப்பட்டு, மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் குறைந்தபட்ச எடை போடப்படும் காலமாக 15 நாள் முதல் 30 நாட்கள் வரை ஆனது. இதுபோல் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் புதிய மூட்டைகள் எடை போடாமலும், எடை போடப்பட்ட பழைய மூட்டைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றி செல்லாமலும் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமாகி கிடக்கிறது. சுமார் 40 நாட்களுக்கு மேலாக திறந்தவெளியில் போதி பாதுகாப்பின்றி வெயிலில் கிடந்து வரும் நிலையில், திடீரென கோடை மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் எடை போடப்பட்ட நெல் மூட்டைகளுக்கு வர வேண்டிய பணம், 2 மாதங்களாகியும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாய செய்வதற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமலும், குடும்ப செலவிற்கு கூட பணம் இன்றியும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்வதுடன், அதற்குரிய பணத்தையும் உடனே வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Procurement Station ,Ramanathapuram District , Unsecured paddy bundles at Government Procurement Station in Ramanathapuram District
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு