×

ஆண்டாள் நகரை ஆளப்போவது யார்?.. தொகுதி ரவுண்ட்-அப்

* வேட்பாளர் மாற்றத்தால் அதிமுகவுக்கு இறங்குமுகம்
* திமுக கூட்டணி பலத்தால் காங்கிரசுக்கு ஏறுமுகம்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தொகுதியில் 108 வைணவத்தலங்களில் மிக முக்கியமான ஆண்டாள் கோயில் உள்ளது. மேலும், உலகையே சுவையில் கட்டிப்போட்ட பால்கோவாவுக்கும் இத்தொகுதியில் பிரபலம்். திருவில்லிபுத்தூர் நகராட்சி, வத்திராயிருப்பு ஊராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதி 1977 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த தாமரைக்கனி 4 முறை தொடர்ச்சியாகவும், ஒரு முறை சுயேச்சையாகவும் என ஐந்து முறை வென்றார். இவரது மகன் இன்பத்தமிழன் அதிமுக சார்பில் ஒரு முறை வென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக, அதிமுக கூட்டணிகளில் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

கூட்டணி ‘விறுவிறு’
திருவில்லிபுத்தூர் தொகுதியில் 1,21,3517 ஆண் வாக்காளர்கள், 1,28,031 பெண் வாக்காளர்கள், இதரர் 32 பேர் என மொத்தம் 2, 49,580 வாக்காளர்கள் உள்ளனர்.சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் தற்போது காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங். வேட்பாளர் மாதவராவ்க்கு ஆதரவாக, திமுக கூட்டணி கட்சியினர் தொகுதிக்குள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளருக்கு ஆதரவாக அவரது மகள் திவ்யா ராவ் கூட்டணிக் கட்சியினருடன் விறுவிறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

‘கை’ கொடுத்த பிரசாரம்
வேட்பாளர் மாதவராவிற்கு ஆதரவாக உள்ளூர் கூட்டணி கட்சித்தவைர்கள் ஒருபுறம் பிரசாரத்தை வேகப்படுத்த, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து மேற்கொண்ட பிரசாரங்கள் கை கொடுத்துள்ளன.

மாற்றத்தால் அதிருப்தி
இத்தொகுதியில் அதிமுக சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். கட்சியினர் வட்டாரத்தில் இவருக்கு போதிய அறிமுகம் இல்லை. இத்தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, அக்கட்சியினரில் பெரும்பாலானோரை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் நிலை இருக்கிறது. மேலும், அதிமுகவுக்கு கிடைக்கும் வாக்குகளை அமமுக வேட்பாளர் சங்கீத பிரியா பிரிக்கும் சூழல் உள்ளது.

அடிப்படை வசதியில்லை...
மேலும், எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா தொகுதிக்குள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. மூடிக்கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறக்க நடவடிக்கை இல்லை. தேனி  வருசநாடு மலைப்பாதை ஏற்படுத்தவில்லை. போக்குவரத்து நெருக்கடி தீர்க்க புதிய  பேருந்து நிலையம் அமைக்கவில்லை. போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கான  திட்டங்கள் இல்லை. கோயில் நகரமாக இருப்பதால், வாகனம் நிறுத்த இடமின்றி  குடியிருப்பு பகுதியில் நிறுத்தும் அவல நிலை இருக்கிறது இப்படி நிறைவேற்றாத திட்டங்கள் மலையென குவிந்து கிடக்கிறது.

திருவில்லிபுத்தூர் தொகுதியில்  அமமுக சார்பில் சங்கீத பிரியா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் மாவட்ட ஓய்வு நீதிபதி குருவைய்யா என களத்தில் பிரதான கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் இருந்தாலும், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், அதிமுக வேட்பாளர் மான்ராஜ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதிலும், பலதரப்பட்ட சாதக செயல்பாடுகளால் மாதவராவ் தேர்தல் ஓட்டப்பந்தயத்தில் முந்தி வருகிறார்.


Tags : Yahweh , Who will rule the city of Andal? .. Block Round-Up
× RELATED திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்