×

அரசின் அவசர கோலத்தால் தொடங்கிய வேகத்திலேயே முடங்கிய ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டம்

தென்காசி மாவட்டம், கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் வடபுறம் ஓடும் ஜம்புநதி என்ற ஓடையில் செல்லும் சிறிதளவு தண்ணீர் மூலமே பாவூர்சத்திரம், செட்டியூர், திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்னெல்தாபுதுக்குளம், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், வெய்க்காலிப்பட்டி, கரிசலூர், கொண்டலூர் உட்பட  100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதனால் விவசாயிகள் முழுமையாக பணிகளை கவனிக்க முடியாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். மேலும் தண்ணீர் இல்லாததால் விளைநிலங்களை விற்றும் வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் கிணறுகள் மூலம் நெல், பல்லாரி, தக்காளி, மிளகாய், வெண்டை, சிறிய வெங்காயம் உள்ளிட்டவைகளை பல இன்னல்களுக்கிடையே விளைவித்து வருகின்றனர். இதே நிலைதான் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்பகுதி குளங்களில் தண்ணீர் நிரம்பி விவசாய பணிகள் செய்வதற்கும், மேற்கண்ட கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2005ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நெல்லையில் நடந்த விழாவில், ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். எனினும் அறிவிப்போடு நின்றது. 2014ம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படாததையடுத்து கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதி விவசாயிகளைக் கொண்ட ராமநதி மேல்மட்ட கால்வாய் போராட்டக் குழுவினர் விவசாயிகள் மாநாட்டை பாவூர்சத்திரத்தில் நடத்தி தமிழக அரசுக்கு மேல்மட்டக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரினர். இதையடுத்து இத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, 2015 செப்டம்பர் 25ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் ராமநதி-  ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

தொடர்ந்து 2015 டிசம்பர் 22ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு  2017-18ல் கால்வாய் செல்லும் பாதைகள் உள்ள தனியார் நிலம் கையகப்படுத்துவதற்கான நிலஅளவை பணிகள் நிறைவுற்று 80 சதவீதம் நிலம் உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. 2020 நவம்பரில் ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணியும் தொடங்கியது. இதற்காக ராமநதி அணை செல்லும் வழியில் இருந்து மலையடிவாரத்தில் தனிப்பாதை அமைக்கப்பட்டு தோரணமலை பின் பகுதி கடவக்காட்டில் ஜேசிபி மூலம் மட்டுமின்றி வெடி வைத்தும் பாதையில் இருந்து பாறைகள் அகற்றப்பட்டு கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்போது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குநராக இருந்த திலீப்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மேல்மட்டக் கால்வாய் பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். கால்வாய் தோண்டும் பணி நடைபெறும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். 1972 வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படியும் 2011 சூழல் செறிவு மண்டலம் சட்டப்படியும் புலிகள் காப்பகமான மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து 10 கிமீட்டர் தூரத்திற்கு வெடி வைத்தல், குவாரி அமைத்தல் உள்ளிட்ட எந்த ஒரு பணிக்கும் இந்திய வன அமைச்சகம், தேசிய வன உயிரின அமைப்பு, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் மூலம் தடையில்லா அனுமதி கடிதம் பெற வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால் கால்வாய் பணிக்கு வனத்துறை அனுமதியோ, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் அனுமதியோ, தேசிய வன உயிரின அமைப்பின் அனுமதியோ பெறவில்லை எனக்கூறி வனத்துறை அதிகாரிகள் மேல்மட்டக் கால்வாய் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், முறையான அனுமதி பெற்று பணி தொடங்குமாறு அறிவுறுத்தினர். அனுமதி இல்லாமல் தொடர்ந்து பணிகள் நடைபெற்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழக அரசு, எப்படியாவது இந்திய வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி வாங்கி விடுவார்கள் என நம்பி பணியாளர்கள் லாரிகள், ஜேசிபி இயந்திரத்துடன் பணி நடைபெறும் இடம் அருகிலேயே ஒரு மாதம் தங்கியிருந்தனர். ஆனால் அனுமதி பெறாததால் ஒப்பந்ததாரர் வாகனங்களை எடுத்து சென்றார்.

இதையடுத்து மேல்மட்டக் கால்வாய் பணிகள் தொடங்கிய ஒரே மாதத்தில் நிறுத்தப்பட்டது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடையம் ராமநதி - ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் திட்டப் பணிகளுக்கு உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி வனத்துறையினர் பணியை நிறுத்தினர். அரசின் அவசர கோலத்தால், தொடங்கிய வேகத்திலேயே பணி நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

கேள்விக்குறியான 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி
ராமநதி - ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் பணிகள் நிறைவடைந்தால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். 15க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரம்பும் நிலை ஏற்படும். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி உருவாகும். ஆனால் இந்த திட்டத்தை உரிய அனுமதி பெறாமல் செயல்படுத்தியதில் இருந்து அவசர, அவசரமாக கமிஷனுக்காக இந்தப் பணிகளை தொடங்கினார்களா என்று மக்கள் மனதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் ஆட்சி மேலிடத்திற்கு நெருங்கிய உறவினர் என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வனத்துறை விளக்க கடிதம்
தமிழக அரசு உத்தரவிட்ட போதும், கால்வாய் திட்டப் பணி வனத்துறை அனுமதியின்றி தொடங்கியதால் இதுதொடர்பாக 2 வனச்சரகர்கள், 2 வனவர்கள், ஒரு வனக்காப்பாளர் ஆகியோருக்கு அம்பை துணை இயக்குநர் திலீப்குமார் விளக்கம் கேட்டு குறிப்பாணை கொடுத்தார். அதனால் இந்தத் திட்டம் அப்படியே நிற்கிறது.  

அனுமதி எங்கே?
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் அருகில் இதுபோன்ற பணிகளைத் தொடங்கும் முன் அதிகாரிகளிடம் உரிய அனுமதி, தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது நியதியாகும். இது அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா அல்லது அரசியல் அழுத்தத்திற்காக இந்தப் பணிகளைத் தொடர்ந்தார்களா என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வனத்துறை அதிகாரி இடமாற்றம்
ராமநதி - ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய்ப் பணிகளை உரிய அனுமதி பெற்று தொடங்குமாறு புலிகள் காப்பகத் துணை இயக்குநர் திலீப்குமார் அறிவுறுத்தினார். இந்தத் தகவல் குறித்து 2021 பிப்.18ம் தேதி இரவு குற்றாலம் தனியார் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக முதல்வர் சம்பந்தப்பட்ட துணை இயக்குநரை அழைத்துப் பேசியதற்கு, அவரிடம் மேலிடத்திற்கு எல்லாத் தகவல்களையும் அறிக்கையாக கொடுத்து விட்டேன். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறிச் சென்றுள்ளார். அதன்விளைவாக துணை இயக்குநர் குற்றாலத்தில் இருந்து அம்பை வருவதற்குள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்து முதன்மை வனப்பாதுகாவலர் உத்தரவு பிறத்தார். அரசின் தவறை சுட்டிக் காட்டியதற்காக வனத்துறை அதிகாரியை அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார். 


Tags : Ramanathi-Jambunathi , The Ramanathi-Jambunathi canal project, which was halted at the same pace as the government's emergency plan
× RELATED கடையம் அருகே கிடப்பில் போடப்பட்ட...