×

22 ராணுவ வீரர்கள் வீர மரணம்: ''வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்காது''.. குடியரசுத் தலைவர்,பிரதமர் இரங்கல்!

டெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் மற்றும் சுக்மா மாவட்டத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதியில் நேற்று  காலை ஜவான்களுக்கும், நக்சல்களுக்கும் இடையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 22 ஜவான்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். வீர மரணமடைந்த ஜவான்கள் கோப்ரா யூனிட், டி.ஆர்.ஜி, சிஆர்பிஎப்-பின் ‘பஸ்டாரியா’ பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்று நக்சல் தடுப்பு பிரிவின் மாநில துணை ஆய்வாளர் ஓ.பி.பால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரர்களின் வீர மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறுகையில், சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேசம் இந்த வேதனையை பகிர்ந்து கொள்கிறது. வீரர்களின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது; என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடியும்  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : President of the Republic , குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த்
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...