×

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்பட 27 மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும்: பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம்; வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 27 மாவட்டங்களில் வெப்பம் வழக்கத்தை விட 6 டிகிரி, அதாவது 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இன்று அதிகரிக்கும். எனவே, பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மதிய நேரங்களில் வெயில் மற்றும் அனல் காற்று அதிகமாக இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் தலைக்காட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் புவியரசன் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலையானது இயல்பை விட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் அதாவது 105 வரை உயரக்கூடும். 5ம் தேதி(நாளை) முதல் 7ம் தேதி வரை கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகப்பட்ச வெப்பநிலையானது இயல்பை விட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.

இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7ம் தேதி வரை ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,Kanchi ,Tiruvallur , In 27 districts including Chennai, Kanchi and Tiruvallur, the temperature will be above 105 degrees: Do not go outside from 12 noon to 4 pm; Weather Center Warning
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு