×

நெல்லையில் பொதுக்கூட்டம் அமித்ஷா பிரசாரத்தை புறக்கணித்த 3 தொகுதி அதிமுக வேட்பாளர்கள்

நெல்லை: நெல்லையில் பாஜ, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 3 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று நிறைவடையும் நிலையில், தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழக பாஜ வேட்பாளர்களை ஆதரித்து  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தாராபுரம், மதுரை, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் நெல்லை தொகுதியில் பாஜவும், பாளையங்கோட்ைட, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிடுகிறது. இதற்காக நெல்லை தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் பாஜ சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக தூத்துக்குடி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். நெல்லை தச்சநல்லூரில் மதியம் 1.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதில் நெல்லை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அதேபோல் கூட்டணி கட்சி என்ற முறையில் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும் பங்கேற்றார்.

அதே நேரத்தில் உள்ளூரில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெரால்ட், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை ஆகிய மூவரும் இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். பாளையங்கோட்டை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என சிறுபான்மையினர் நிறைந்த தொகுதியாகும்.எனினும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் கூட அமித்ஷாவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

பொதுவாக கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கை கூப்பி ஆதரவு கோருவது வழக்கம். அதுவும் மத்தியில் பிரதமருக்கு அடுத்ததாக 2ம் இடத்தில் உயர் பதவியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.பாஜவுடன் கூட்டணி வைத்திருந்த போதிலும், பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. மோடி, அமித்ஷா படத்தை கூட போடுவதில்லை. அதுபோலவே, இந்த அமித்ஷா தேர்தல் பிரசார கூட்டத்திலும் பங்கேற்காமல் அதிமுக வேட்பாளர்கள் ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

* ஜே.பி.நட்டாவை புறக்கணித்த அமைச்சர்கள்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து சிவகிரியில் பாஜ சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் புறக்கணித்தனர். அதில், மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2 அமைச்சர்களும் பங்கேற்கவில்லை. பொதுக்கூட்ட மேடையில் அதிமுகவின் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய வேட்பாளருமான கே.வி.ராமலிங்கம் வருவார் என இருக்கை ஒதுக்கப்பட்டு பெயர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், ராமலிங்கமும் வரவில்லை. இது, பாஜ தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

* ஒட்டிக் கொண்ட இரட்டை இலை
பாஜ தேர்தல் பிரசார கூட்டம் என்ற போதிலும் மேடையில் இருந்த மெகா சைஸ் பேனரில் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா படங்களுடன் கூட்டணி கட்சி என்ற முறையில் ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் படங்கள் பெரிதாகவும், கூட்டணி கட்சி  தலைவர்களின் படங்கள் ஓரமாகவும் இடம் பெற்றன. அதே நேரத்தில் மேடையின் இருபுறங்களிலும் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மைக் செட்டில் மோடி, அமித்ஷா படத்திற்கு நடுவில் தாமரை சின்னம் மட்டுமே பெரிதாக இடம் பெற்றிருந்தது. அமித்ஷா வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, தாமரையின் கீழ் இரு இடங்களில் ஸ்டிக்கர் வடிவில் இரட்டை இலை சின்னம் சிறியதாக ஒட்டப்பட்டது.

Tags : AIADMK ,Amit Shah ,Nellai , AIADMK candidates boycott Amit Shah campaign in Nellai
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...