திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி

* திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தமிழக மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதனால், நிச்சயமாக திமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதியானது.

* ஆளும்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை என்ன மாதிரியாக இருக்கிறது?

எல்லா விதத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு இல்லை. கொரோனா தொற்று காலக்கட்டங்களில் அரசாங்கம் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. அடிப்படை தேவைகள் எதையும் இந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்து கொடுக்கவில்லை. அதனால், எல்லாருடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

* அதிமுக வேட்பாளர்களை மக்கள் ஊருக்குள் வரவிடாமல் விரட்டி அடிக்கின்றனரே?

இங்கே வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் இப்படி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையை தாண்டி வந்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை திரும்பவும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி 50 வருடம் பின்னோக்கி போய் இருக்க கூடிய நிலையை நாம் அடைந்துள்ளோம். அதுதான் மக்களின் கோபத்துக்கு காரணம்.

* திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை குறி வைத்து ரெய்டு நடக்கிறதே?

வழக்கமாக எதிர்க்கட்சிகள் மீது சோதனை நடத்தி அவர்களை பயமுறுத்தி விடலாம் என்று நினைக்கக்கூடிய எண்ணப்போக்கு தான். ஆனால், நிச்சயமாக வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு தான் சாதகமாக இருக்கும். மக்களுக்கு நாங்கள் (எதிர்க்கட்சிகள்) மிரட்டப்படுகிறோம் என்பது அவர்களுக்கு தெளிவாக புரிகிறது.

* தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தரப்படும் பல புகார் மனுக்களை அவர்கள் எடுத்து கொள்வது கூட கிடையாது. அவர்கள் கேட்பதுகூட கிடையாது. அவர்கள் ஆளும் கட்சியின் விதிமீறல்களை கண்டுகொள்வதும் இல்லை. தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

* திமுக எம்எல்ஏக்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை பிரசாரத்திற்கு வருமாறு அழைத்து பதிவு செய்து இருக்கிறார்களே?

இப்போது நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய அதிமுக ஆட்சி பாஜவின் பினாமி ஆட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்கிற கோபம் நிச்சயம் மக்கள் மத்தியில் உள்ளது.

* ஆளும்கட்சி பணத்தை வைத்து வாக்குகளை பெற்று விடலாம் என்று எண்ணுகின்றனரே?

இந்த தேர்தலில் நிச்சயமாக பணத்தை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஆளும் கட்சியினர் பணம் கொடுத்தால் கூட இது மக்களிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம் என்பதால், அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் பணம் என்று தெரியும். அவர்களின் பணம் தான் அவர்களுக்கு திரும்பவும் வருகிறது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

Related Stories:

>