×

சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயணம் ரகசியம் என்ன?

பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்தார். ஆனால், டிடிவி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசியல் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அவரின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நீண்ட நாட்கள் தி.நகர் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கு தனது உறவினர்களை சந்தித்தார். பின்னர், அங்கிருந்தவாறே தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின் போதும் சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால், சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக கோயில், கோயிலாக செல்லும் சசிகலாவை அமமுக வேட்பாளர்களும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

எனவே, இது குறித்து அமமுக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சசிகலா சிறையில் இருந்தபோது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தார். இதனால், அவர் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்டுள்ளார். இதனாலேயே, தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களுக்கு நேரடியாக சென்று அவர் ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா கூறினாலும் அவர் மறைமுக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் எங்கே சென்றாலும் அந்த மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் சசிகலா தங்குவதற்கு உண்டான அனைத்து செலவுகளையும் செய்து வருகின்றனர்.

தங்களை சந்திக்க வரும் வேட்பாளர்கள், அமமுகவினரிடம் அரசியல் நடவடிக்கைகளின் நுணுக்கங்களை சொல்லித் தருகிறார். ஏற்கனவே, தன்னை சந்தித்த சாருபாலா தொண்டைமானிடமும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும், தனக்கு நெருக்கமான நபர்களிடம் அவர் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டறிந்துள்ளார். இதில், கோவில்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, உசிலம்பட்டி, திருவாடானை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10 தொகுதிகளை தெரிவித்துள்ளனர். இதை குறிவைத்தே சசிகலாவின் ஆன்மிக சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. அந்தவகையில் ராமேஸ்வரம், திருச்சி ரங்கநாதர், நாகூர் தர்கா, திருவிடைமருதூர், கோவில்பட்டி செண்பகவல்லி ஆலயம், தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளிட்ட ஆலையங்களுக்கு சென்றுள்ளார். மேலும், தேர்தல் செலவுத் தொகையையும் பெற்றுத்தருவதாக சசிகலா வேட்பாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவின் மறைமுக ஆதரவினால் அமமுக வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Tags : Sasikala , What is the secret of Sasikala's spiritual tour?
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!