×

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கைது தொடர்பாக உயர்மட்ட குழு அறிக்கை

புதுடெல்லி: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை சட்ட விரோதமாக கைது செய்து அவரை துன்புறுத்தியது தொடர்பாக உயர்மட்ட குழு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன், கடந்த 1994ம் ஆண்டு கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டிற்கு திருடி விற்றதாக கேரள காவல்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ., நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபித்தது.

இதையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு ₹50 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்திய போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கேரள அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பாக நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 பேர் குழு அமைத்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 14ல் உத்தரவிட்டது. இரண்டரை வருடங்களாக பல்வேறு விசாரணை மேற்கொண்ட இந்த உயர்மட்ட குழு, தனது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : ISRO ,Nambi Narayanan , ISRO scientist Nambi Narayanan In connection with the arrest Top Committee Report
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...