×

ஒடிசா சட்டப்பேரவையில் பாஜ ரகளை சபாநாயகர் மீது செருப்பு வீச்சு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை நோக்கி பாஜ எம்எல்ஏக்கள் செருப்பு, குப்பை தொட்டி வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாய்க் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று நடந்தது. இதில், சுரங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், சபாநாயகர் எஸ்.என்.பட்ரோ அதை நிராகரித்தார். அதே சமயம், ஒடிசா லோக் ஆயுக்தா திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட வேகத்தில் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சியான பாஜ.வின் மூத்த எம்எல்ஏக்கள் ஜே.என்.மிஸ்ரா மற்றும் பி.சி.சேத்தி ஆகியோர் தங்களின் இருக்கையின் மீது ஏறி நின்று கோஷமிட்டபடி கையில் கிடைத்த பொருட்களை சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினர். சபாநாயகரை நோக்கி செருப்பு, பேனா, குப்பை தொட்டி, காகிதம், இயர்போன் போன்றவை வீசப்பட்டதால் அவை ரணகளமானது. இதைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கூறி உள்ளார். பாஜ எம்எல்ஏ சேத்தி கூறுகையில், ‘‘நான் எதை தூக்கி எறிந்தேன் என்று எனக்கே தெரியாது.  நாங்கள் யாரும் செருப்பை வீசவில்லை. ஆனாலும், இந்த சம்பவத்திற்கு சபாநாயகர் தகுதியானவர்தான். ஏனெனில், அவர் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை,’’ என்றார். இதனால் அவையில் நேற்று பதற்றமான சூழல் நிலவியது.



Tags : BJP ,Odisha Assembly , BJP rallies in Odisha Assembly Shoe throw on the speaker
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...