வெ.இண்டீஸ் - இலங்கை டெஸ்ட் தொடர் டிரா

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளிடையே நடந்த டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் வெ.இண்டீஸ் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதின. ஆன்டிகுவா ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் அதே மைதானத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ்  முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்தது. கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் 124 ரன் விளாசினார். இலங்கை பந்துவீச்சில் லக்மல் 4, சமீரா 3 விக்கெட் எடுத்தனர்.

இலங்கை முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆட்டமிழந்தது. திரிமன்னே 55, பதும் நிஸங்கா 51 ரன் எடுத்தனர். 96 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது (72.4 ஓவர்). பிராத்வெய்ட் 85, மேயர்ஸ் 55 ரன் விளாசினர். ஹோல்டர் 71, ஜோஷுவா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 377 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன் எடுத்திருந்தது. திரிமன்னே 17, கேப்டன் கருணரத்னே 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கடைசி நாள் ஆட்டத்தில் திரிமன்னே 39 ரன், கருணரத்னே 75 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இலங்கை  2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்திருந்தபோது (79 ஓவர்) ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் ஒப்புக்கொண்டன. ஒஷதா பெர்னாண்டோ 66 ரன், தினேஷ் சண்டிமால் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.  ஆட்ட நாயகனாக கிரெய்க் பிராத்வெய்ட், தொடர் நாயகனாக சுரங்கா லக்மல் தேர்வு செய்யப்பட்டனர். ஒருநாள், டி20 தொடர்களை இழந்த இலங்கை,  டெஸ்ட் தொடரை டிரா செய்த  திருப்தியுடன் நாடு திரும்புகிறது.

Related Stories:

>