பா.ஜ அமைச்சர் மீதான தடை ஒரு நாளாக குறைப்பு

புதுடெல்லி: அசாமின் பாஜ தலைவரும், அம்மாநில நிதி அமைச்சருமான ஹிமாந்த் பிஸ்வா சர்மா பிரசாரம் செய்வதற்கு 48 மணி தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று அது  24 மணி நேரமாக திடீரென குறைக்கப்பட்டது.அசாமில் சட்டப்பேரவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று மாலையுடன் பிரசாரம் முடியும் நிலையில், ஆளும் பாஜ.வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் பல இடங்களில் மோதல் நடந்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, போடோலாந்து மக்கள் முன்னணி பிரமுகரை பாஜ மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஹிமாந்த் பிஸ்வா சர்மா மிரட்டியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் கூறியது. அதன் பேரில், அவருடைய பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், ‘வரும் 6ம் தேதி நான் போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.  எனவே, பிரசாரர தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் பிஸ்வா சர்மா கோரிக்கை வைத்தார்.  இதை ஏற்றுள்ள தேர்தல் ஆணையம், அவர் மீதான பிரசார தடையை நேற்று 24 மணி நேரமாக குறைத்து உத்தரவிட்டது. அதனால், இன்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார்.

Related Stories:

>