×

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் பணம் கைப்பற்றப்பட்டு மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படும்: தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் பணம் கைப்பற்றப்பட்டு, மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும். தமிழகத்தில் ஊழற்ற, வன்முறையற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவேன். மக்கள் கோரிக்கைகளை 100 நாளில் செயல்படுத்துவதுதான் என் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று தினகரன் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் சென்னையில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். ஓய்வின்றி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகிறார். இந்த சூழலிலும் தினகரன் நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சிறப்பு பேட்டி அளித்தார்.  பேட்டி விவரம்:

*  தமிழகத்தின் 234 தொகுதிகளையும் சுற்றி, மிகப் பெரும் சூறாவளி பிரசாரத்தை முடித்து வந்துள்ளீர்கள். மக்களின் மனநிலையை எப்படி உணருகிறீர்கள்?மக்கள் மிகத் தெளிவான தீர்ப்புக்குத் தயாராகிவிட்டார்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாடு பல துறைகளிலும் கடும் பின்னடைவை சந்தித்த காரணத்தால், அது ஒவ்வொரு தனி மனிதருடைய வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஏதேனும் ஒரு வகையில் கடுமையான தாக்கத்தை - பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தின் உரிமைகள் மொத்தமும் மத்திய ஆட்சியாளர்களிடம் அடமானம் வைக்கப்பட்டதால் தங்கள் பிள்ளைகளின் மருத்துவப் படிப்பு கனவு பறிபோனது, மாநிலத்திற்கு வரவேண்டிய நிதி ஆதாரம் கிடைக்காததால் தங்கள் பகுதிக்கான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் நிறைவேறாதது, வேலைவாய்ப்புகளுக்கு வழி இல்லாதது, தொழில் பாதிப்பு, கொரோனா கால பேரிழப்புகளிலிருந்து மீள முடியாத நிலை, கூடுதல் சுமையாக பெட்ரோல்-டீசல்-சமையல் காஸ் விலை உயர்வு - அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு என எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், தங்கள் தீர்ப்பு என்ன என்பதை மனதில் எழுதியும் வைத்து விட்டார்கள் என்பதை 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய தேர்தல் பரப்புரை பயணங்களில் காண முடிந்தது. அவர்கள் எனக்குத் தந்த அன்பான - மகத்தான வரவேற்பு என்பதே ஆட்சி மாற்றத்திற்கான அத்தாட்சிப் பத்திரம்.

*  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பற்றி எந்த குறையும் சொல்ல முடியாத நிலையில், அற்ப காரணங்களுக்காக அழுது, கதறி, சென்டிமென்ட் நாடகத்தை செய்துவரும் அதிமுகவின் திட்டம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?மத்தியிலும்-மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் தங்களுடைய சாதனைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்பதற்கு சிறிதும் வழியில்லாததால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.முக. மீதும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் இட்டுக்கட்டிய, வெட்டி-ஒட்டிய, தில்லுமுல்லு வேலைகளை முன்வைத்து எதிர்மறை பரப்புரை நாடகத்தை நடத்தினார்கள். தங்கள் கட்சித் தலைவரின் மரணம் உள்பட எத்தனையோ மர்மங்கள், மோசடிகள்; துரோகங்களுக்கு அஞ்சாத முதல்வர் பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் இதனைச் செய்தது மட்டுமின்றி, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி அவர்களும் அவருடைய கட்சித் தலைவர்களும் இதே பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, தி.மு.கவுக்கு எதிரான திட்டமிட்ட பரப்புரை செய்தது என்பது மத்திய-மாநில ஆளுங்கட்சிகளின் கூட்டணி எத்தனை பலவீனமாக இருக்கிறது என்பதையே காட்டியது. நீட் தேர்வு ரத்து குறித்தோ, வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்தோ குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்தோ ஒரு வார்த்தைகூட அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. மக்களிடம் அவர்களின் கபட நாடகம் எடுபடாத அளவுக்கு, வேடம் கலைந்துவிட்டது.

*  காமராஜர், எம்ஜிஆர் போன்ற தங்களுக்குத் தொடர்பு இல்லாத தலைவர்களைப் பற்றியும், தமிழ் மொழி, கலாச்சாரத்தில் அக்கறை உள்ளது போலவும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தேர்தல் காலங்களில் செய்யும் வேலையை எப்படி பார்க்கிறீர்கள்?சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என முதல்வராக இருந்த கலைஞர் விழா மேடையில் வைத்த கோரிக்கையை அந்த கணமே ஏற்று, அந்தப் பெயரை சூட்டியவர் சமூக நீதிக் காவலரான அன்றைய பிரதமர் வி.பி.சிங். அந்த முனையத்திற்கு வைக்கப்பட்ட காமராஜர் பெயரை அகற்றியதுதான் மோடி அரசு. எம்.ஜி.ஆர். சிலைகள் மீது காவி நிறம் பூசியும்-காவித்துண்டு அணிவித்தும் கூட்டணிக் கட்சியின் நிறுவனரையே இழிவுபடுத்தியவர்கள்தான் பா.ஜ.க.வின் கூட்டாளிகள். இந்தி-சமஸ்கிருத திணிப்பை மேற்கொள்வதும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேண்டுமென்றே குறைந்த நிதி ஒதுக்குவதும், மத்திய அரசு தேர்வுகளை தமிழில் எழுத முடியாமல் செய்வதும், தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்குவதும் பா.ஜ.க.வின் சூழ்ச்சியான தொடர் செயல்திட்டமாக இருக்கிறது. இத்தனை மோசடிகளையும் ஒட்டுமொத்தமாகச் செய்துவிட்டு, தமிழ் கலாச்சாரம் என்கிற முகத்திற்கு ஒத்துவராத - பொருத்தமில்லாத ஒப்பனையை மோடி தொடங்கி அத்தனை பா.ஜ.க தலைவர்களும் போட்டுக்கொண்டு வந்து அம்பலப்பட்டுத் திரும்புகிறார்கள்.

*  ‘‘கிராம சபை கூட்டம்’’, ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என தமிழக மக்களை மிக நெருக்கமாக சந்தித்து, அவர்களின் குறைகளை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் 100 நாளில் மக்கள் குறைகளை தீர்ப்பேன் என்று கூறியுள்ளீர்கள். இந்த புரட்சிகர திட்டம் குறித்து மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அது குறித்து தங்கள் கருத்து?
தி.மு.க என்பது எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கிற பேரியக்கம். மக்களிடம் செல் என்பது அறிஞர் அண்ணா கற்றுத் தந்த பயிற்சி. அதனை மிகப் பரவலான-ஆழமான முறையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். அதன் வெவ்வேறு வடிவங்கள்தான் கிராம சபை கூட்டங்களும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆகிய செயல்திட்டங்கள். ஆளுங்கட்சி தங்களின் குறைகளைக் கேட்கக்கூடத் தயாராக இல்லாத நிலையில், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் ஒவ்வொரு தொகுதியிலும் திரண்டு வந்து, என்னிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தின் வாசலிலிருந்து அறிவித்ததுபோல, தி.மு.க ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிட முழுமையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

*  தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழ்கள், இணைய தளங்கள் என அனைத்து வகை ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளனர். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?கருத்துக் கணிப்புகள் தி.மு.கவுக்கு சாதகமாக வந்தாலும்-பாதகமாக வந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் களப்பணியாற்றினால்தான் வெற்றி என்பதை தலைவர் கலைஞர் அடிக்கடி நினைவூட்டுவார். அதையேதான் கழகத் தொண்டர்களுக்கு நானும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள், களத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு உத்வேகம் - மகிழ்ச்சி அளிப்பவையாக இருக்கும். எனினும், முழுமையான - கவனமான- விழிப்பான உழைப்புதான் உண்மையான வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். வாக்குப்பதிவு நிறைவடையும் வரை அந்த உழைப்பு எந்தவிதத் தொய்வுமின்றி தொடர வேண்டும்.

*  திமுகவின் வெற்றியை பொறுக்க முடியாமல் திமுக முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியுள்ளது பற்றி?தி.மு.கவின் பிரம்மாண்ட வெற்றி அலையைத் தடுத்திட முடியாது என்பதால் அதிகாரத்தின் கரங்களைக் கொண்டு, துஷ்பிரயோக எண்ணத்துடன்  மிரட்டல் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். கடல் அலை எவர் கட்டளைக்கும் கட்டுப்படுவதில்லை. தி.மு.கவுக்கு கிடைத்திருக்கிற மக்களின் பேராதரவும் அப்படித்தான். ரெய்டு பூச்சாண்டிகளால் அ.தி.மு.க மேலும் தீவிர அடிமையாகலாம். தி.மு.க. இன்னும் வலிமையாகும்.

*  இதுவரை இல்லாத அளவில் ஆளும் கட்சி மீது மக்களிடம் வெறுப்பு அலை தோன்றியுள்ளது. இதற்கு காரணம் அதிமுகவா, பாஜகவா?மக்களை வஞ்சிப்பதிலும் இரண்டு கட்சிகளும் அவற்றின் ஆட்சிகளும் கூட்டணி அமைத்தே செயல்படுகின்றன. தமிழ்நாடு என்கிற பெயரையே மாற்றிவிட வேண்டும் என்கிற அளவுக்கு நமது பண்பாட்டின் மீது வன்மத்துடன் போர் தொடுத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு எல்லா வகையிலும் குனிந்து-வளைந்து முதுகு கொடுத்து சவாரி செய்ய அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு. வாழ்வாதாரத்துடன் சுயமரியாதையையும் இந்த இரண்டு கட்சிகளால் இழந்த தமிழக மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புதான் தேர்தல் களத்தில் காண்கிற வெறுப்பு மிகுந்த எதிர்ப்பு அலை.

*  ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் அடித்த ஊழலுக்கும், எடப்பாடி இருக்கும்போது அமைச்சர்கள் அடித்த ஊழலுக்கும் என்ன வேறுபாடு?அது ஒருங்கிணைக்கப்பட்ட ஊழல். இது அவரவர் தன்னிறைவுத் திட்டம். மொத்தத்தில் அரசாங்கத்தின் கஜானாவை சுரண்டிக் கொழுப்பது ஒன்றே அ.தி.மு.க ஆட்சியின் செயல்திட்டம்.

*  அதிமுக அமைச்சரவையில் டாப் 10 ஊழல் அமைச்சர்களை வரிசைப்படுத்துங்கள்?ஊழலில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒருவருக்கொருவர் விடாக்கண்டர்களாகவும், கொடாக்கண்டவர்களாகவும் இருக்கிறார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை.

*  அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் ஆளுநரிடம் திமுக வழங்கியுள்ளது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது பற்றி?உரிய ஆதாரங்களுடன் முழுமையான அளவில் ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்து, நடவடிக்கையை வலியுறுத்தினோம். இதுநாள் வரை நடவடிக்கை இல்லை. விரைவில் அமையும் தி.மு.க அரசே கடுமையான நடவடிக்கை எடுக்கட்டும் என ஆளுநர் நினைத்திருக்கலாம்.

*  பாஜக மாநில தலைவர் போட்டியிடும் தொகுதி உட்பட 20 தொகுதியிலும் மோடி, அமித்ஷா படத்தை பாஜகவினர் தவிர்ப்பது ஏன்?சொந்தக் கட்சி வேட்பாளர்களே தவிர்க்கின்ற அளவுக்கு, தமிழகத்திற்கு அவர்கள் இருவரும் அந்தளவு ‘புண்ணியம்’ செய்திருக்கிறார்கள்.
 
*  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஊழல் அமைச்சர்கள் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும்?சட்டரீதியான-உறுதியான-தண்டனையிலிருந்து தப்பவே முடியாத நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*  ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முடங்கியநிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைவருக்குமான முதல்வர் பொறுப்பில் இருந்தவர். அரசியல்ரீதியாக தி.மு.க.வுக்கு அவருடன் கொள்கை மாறுபாடு இருந்தபோதும், அவர் உடல்நலிவுற்ற நிலையில், மருத்துவமனை சென்று அங்குள்ளவர்களிடம் நலன் விசாரிக்க என்னைப் பணித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். இதுதான், தமிழகம் கடைப்பிடிக்கிற அரசியல் நாகரிகம். எதிர்க்கட்சியினர் பலரும் இதே அக்கறையுடன் செயல்பட்ட நிலையில், அந்த அம்மையாரால்தான் எங்களுக்கு வாழ்க்கையே கிடைத்தது என சட்டமன்றத்திலும் பொதுமேடைகளிலும் மக்கள் முன் வசனம் பேசியவர்கள்-அந்த அம்மையார் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கின் தீர்ப்பினால் பதவி பறிக்கப்பட்டு சிறைக்கு சென்றபோது, அழுதுகொண்டே பதவிப்பிரமாணம் ஏற்ற நடிப்புக் கலைஞர்கள், அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி தன் சொந்தக் கட்சியின் தொண்டர்களுக்குகூட பதில் சொல்லாத நன்றி கொன்றவர்களாகவே இருக்கிறார்கள். அ.தி.முக. தொண்டர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவரின் சந்தேகத்திற்கும் தெளிவு கிடைக்கும் வகையில் அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்துள்ள மர்மங்கள் நீதியின் ஒளியில் தோண்டி எடுத்து வெளிச்சத்தில் வைக்கப்படும்.

*  அதிமுக, பாஜ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 8 வழிச்சாலை, மீத்தேன், ைஹட்ரோ கார்பன், நீட் தேர்வு, வேளாண் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படுமா?தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற உறுதியினை தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டிருக்கிறோம். அதுபோலவே, மக்களுக்கு-மாணவர்களுக்கு-விவசாயிகளுக்கு-இயற்கை அரணுக்கு-மனித குல நன்மைக்கு எதிரான பா.ஜ.க-அ.தி.மு.கவின் அனைத்து சட்டங்கள் திட்டங்கள் அனைத்தும் சட்டத்தின் துணையுடன் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் உண்மையான மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

*  அதிமுக, பாஜகவின் அலங்கோல ஆட்சியாலும், கொரோனா பாதிப்பாலும் கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லொணா துன்பத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அதேநேரத்தில், அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது. இந்த சட்டவிரோத பணத்தை மீட்க என்ன மாதிரியான நடவடிக்கையை திமுக எடுக்கும்?அ.தி.மு.க ஆட்சி பற்றி நான் தொடர்ச்சியாக சொல்லி வருவது, இது கமிஷன்-கரப்ஷன்-கலெக் ஷன் ஆட்சி என்பதைத்தான்! அரசின் திட்டங்களுக்கான நிதியை டெண்டர்-கான்ட்ராக்ட் என்ற பெயரில் முதலமைச்சரின் உறவினர்கள் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் குடும்பத்தினரும் கொள்ளையடித்து வருவதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஊழலுக்கு எதிரான பொதுநல அமைப்புகளும் வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள்.

மத்திய பாஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ-அமலாக்கத்துறை-வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகளும் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால், அந்த ரெய்டுகளின் முடிவு என்ன-அதன் மீதான நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை. ஊழலை ஒழிப்போம் என உத்தமர்கள் போல வேடம் போடும் மோடியும் அமித்ஷாவும் தங்கள் ஊழல் கூட்டாளிகளான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் எனும் இரட்டையர்களின் கையைப் பிடித்து உயர்த்தி ‘கூட்டணி தர்மம்’ காத்து ஊழலுக்குத் துணை போகிறார்கள். பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டு சதியால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஊழல் பணத்தை மூட்டை கட்டுகிறார்கள். அந்த மூட்டைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு, மக்கள் நலனுக்கான அரசுத் திட்டங்களுக்கு செலவிடப்படும்.

*   மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், பாஜக ஏவும் அஸ்திரங்கள் எல்லாம் தமிழகத்தில் மட்டும் தோற்றுப்போவதன் காரணம் என்ன?இது திராவிட மண். சமூக நீதி மண். தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்து வளர்ந்த, பண்படுத்தப்பட்ட மண். பெருந்தலைவர் காமராஜர்-தோழர் ஜீவா-கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் என பல தரப்பினரும் அரசியல்-சமுதாய தளத்தில் பக்குவப்படுத்திய மண். இங்கே ஆன்மிகம் உண்டு. மதவெறிக்கு இடம் கிடையாது. கோயில்கள் உண்டு. அதன் பெயரால் குழப்பம் விளைவிப்போருக்கு இடம் கிடையாது. வழிபாடு உண்டு. வன்முறை கிடையாது. வள்ளுவர் நெறியும் வள்ளலார் ஒளியும் சாதிபேதமற்ற பண்பை வளர்த்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை உணர்த்துகிற உயர்வான நிலம் இது.

இங்கே மதத்தின் பெயரால்-வருணாசிமரத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறையை விதைத்து, அதில் அரசியல் லாபம் தேடலாம் என நினைப்பவர்களை கட்சி கடந்து அனைத்து தமிழர்களும் புறக்கணிப்பார்கள். அண்மையில் கோவைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது பா.ஜ.க.வினர் ஏற்படுத்திய கலவரச் சூழலே அவர்கள் எத்தகைய ஆபத்தானவரகள் என்பதைத் தமிழகத்திற்கு காட்டிவிட்டது. அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பேச்சு எத்தகைய வன்முறையாளர்கள் என்பதை உணர்த்தி இருக்கிறது. குஜராத் போல தமிழ்நாட்டை  மாற்றிவிடலாம் என நினைக்கும் மோடி-அமித்ஷா உள்ளிட்டோர் எடுக்கும் அஸ்திரங்களையும் தேர்தல் மூலம் தமிழக மக்கள் முறியடிப்பார்கள்; முனை மழுங்கச் செய்வார்கள்.


* சமீபகாலங்களில் இளைஞர்கள் பெருமளவில் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இது எதைக் காட்டுகிறது?தி.மு.க எப்போதுமே இளைஞர்களின் இயக்கம். அண்ணா அவர்கள் தொடங்கியபோது அவர் உள்பட எல்லாருமே இளைஞர்கள்தான். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, புதிய இளைஞர்களின் பாசறையாக தி.மு.கவின் இளைஞரணி உருவானது. இப்போதும் அது சிறப்பாக செயல்படுகிறது. இளைஞர்களின் பங்கேற்பு-பங்களிப்பு மட்டுமின்றி அவர்களின் தேவை-வளர்ச்சி-முன்னேற்றம் ஆகியவற்றை சிந்தித்து செயல்படுத்துவதும் தி.மு.கதான் என்பது கடந்த கால கழக ஆட்சியின் வரலாறு. அந்த வரலாறு மீண்டும் திரும்புவதன் அடையாளமாகத்தான் இளைஞர்கள் பெருமளவில் தி.மு.கவில் இணைகிறார்கள்.

* தேர்தல் வாக்குப்பதிவு அன்று திமுகவினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?மக்கள் தரவிருக்கும் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக சேகரித்திடுங்கள். இத்தனை நாட்கள் அயராது பாடுபட்டதன் பலன், கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்திட விழிப்புடன் இருங்கள். ஒவ்வொரு வாக்கும் தீர்ப்பைத் தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள். ஆளுங்கூட்டணியின் அத்துமீறல்களை சட்டரீதியாகத் தடுத்திடுங்கள். கடைசி நேரம் வரையிலான உழைப்பின் மூலம் வரலாற்று வெற்றியை உறுதி செய்யுங்கள்.

* தேர்தலில் திமுக இதுவரை பெற்றிராத மாபெரும் வெற்றியை பெற்று நீங்கள் முதல்வராவது உறுதியாகி உள்ளது. நீங்கள் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் உங்களில் ஒருவன். உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றும் கடமையை உணர்ந்தவன். பதவி எனும் அதிகாரத்தை பொறுப்பு எனும் சுமையாக தோளில் ஏற்று, உங்களுக்காக எப்போதும் உழைத்திடுவேன். ஊழலற்ற-வன்முறையற்ற-வெளிப்படையான-திறமைமிகுந்த-முன்னேற்றப் பாதையிலான நிர்வாகத்தை வழங்குவேன் என உறுதி அளிக்கிறேன்.

* முதல்வராக பதவி ஏற்றவுடன் நீங்கள் போடும் முதல் கையெழுத்து எது?மகத்தான வெற்றித் தீர்ப்பை தி.மு.கழக கூட்டணிக்கு தரவிருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்தும் நன்றியாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.கழகத்தின் தலைவனான என்னை நம்பி, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் வழங்கிய கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவதற்குரிய செயல்பாடுகளுக்கான கையெழுத்து. இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.

*  ஊழலற்ற - வன்முறையற்ற - வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவேன்.
*  மக்கள் வழங்கிய கோரிக்கைகளை 100 நாளில் செயல்படுத்துவதுதான் முதல் கையெழுத்து.
*  பாஜ-அதிமுக கூட்டு சதியால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.
*  கஜானாவை சுரண்டிக் கொழுப்பதையே அதிமுக ஆட்சி செயல்திட்டமாக வைத்திருந்தது.

ஆளுங்கட்சி தங்களின் குறைகளைக் கேட்கக்கூடத் தயாராக இல்லாத நிலையில், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் ஒவ்வொரு தொகுதியிலும் திரண்டு வந்து, என்னிடம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள்.சொந்தக் கட்சி வேட்பாளர்களே தவிர்க்கின்ற அளவுக்கு, தமிழகத்திற்கு மோடியும் அமித்ஷாவும்
‘புண்ணியம்’ செய்திருக்கிறார்கள்.

Tags : Dinagaran Day ,Tinakaran Day ,Q. ,Stalin , When the DMK came to power, the corrupt money of the AIADMK rulers was seized Expenditure on public welfare schemes: DMK leader MK Stalin confirms in an exclusive interview with Dinakaran daily
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!!