×

குஷ்புவை ஆதரித்து அமித்ஷா வேனில் பயணம்: ஓட்டு கேட்டு பேசாததால் வேட்பாளர்கள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாகவே திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சியினர் இறுதிகட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். இதேபோல், தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் குஷ்பு மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள வந்தார். தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து காலை 10 மணிக்கு பிரசார பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 50 நிமிடம் தாமதமாக 10.55 மணி அளவில் அமித்ஷா பிரசார வாகனத்தை வந்தடைந்தார். 500க்கும் மேற்பட்ட பாஜ, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரண்டிருந்து அமித்ஷாவை வரவேற்றனர்.

இதையடுத்து, பிரசார வாகனத்தில் அமித்ஷாவுடன் குஷ்பு, சைதை துரைசாமி, ஜான் பாண்டியன், ஆதிராஜாராம் உள்ளிட்டோர் இருந்தனர். தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஆரம்பித்த பிரசாரம் மா.பொ.சி சிலையுடன் முடிவுற்றது. தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சுமார் 15 நிமிடம் மட்டுமே அமித்ஷா வாக்கு சேகரித்தர்.  அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். மேலும், தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக இணைந்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதையடுத்து, அமித்ஷா பிரசாரத்தில் உரையாற்றுவார் என வேட்பாளர் குஷ்பு தன்னுடைய மைக்கில் தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால், அமித்ஷா தொண்டர்கள் மத்தியில் எதுவும் பேசாமல் பிரசாரத்தை முடித்துக்கொண்டார். பின்னர், தன்னுடைய வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பேசுவார் என எதிர்பார்த்திருந்த தொண்டர்களும், அதிமுக, பாஜக வேட்பாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.

Tags : Amitsha ,Kushbu , In support of Kushbu Amitsha travels in a van: Candidates dissatisfied with not being asked to drive
× RELATED தேர்தல் பத்திரம்.....