×

கோவில்பட்டியில் வாக்கு கேட்க சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை பெண்கள் திடீர் முற்றுகை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் வாக்கு கேட்கச்சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம்  சாலை மற்றும் கால்வாய் வசதி செய்யவில்லை எனக் கூறி பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன், அமமுக சார்பில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 இந்நிலையில் கோவில்பட்டி சாஸ்திரி நகர், போஸ்நகர் பகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது அப்பகுதி பெண்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை, கால்வாய் வசதி இல்லை, குடிநீர் சீராக விநியோகிக்கப்படுவது இல்லை, இத்தனை நாட்கள் எங்கே சென்றீர்கள்,  என்று குற்றம்சாட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூவை முற்றுகையிட்டனர். உடனே அமைச்சர், சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் பணிகள் துவங்கும், இதேபோல் குடிநீர் சீராக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடிப்படை வசதி கோரி அமைச்சரை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Minister ,Kadampur Raju ,Kovilpatti , Went to Kovilpatti to cast his vote Minister Kadampur Raju Sudden siege of women
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!