×

சொன்னாரே செஞ்சாரா? கோரிக்கைகளை கிடப்பில் போட்ட எம்எல்ஏ: பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமான தொகுதி பொள்ளாச்சி. கோவை மாவட்டத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தொகுதி இது. கடந்த 2011-ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்போது, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பகுதிகள் பிரிக்கப்பட்டதால், சிறிய தொகுதியாக சுருங்கிவிட்டது. தென்னை நார் தொழிற்சாலைகள் இத்தொகுதியில் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் அதிகளவு இளநீர் உற்பத்தியும் இங்கு நடக்கிறது. பொள்ளாச்சி நகர் பகுதியில் தினமும் காலையும் மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் இத்தொகுதியின் முதன்மையான பிரச்னை.பொள்ளாச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ரிங் ரோடு கிடப்பில் உள்ளது. காந்தி சிலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படவில்லை.  

பொள்ளாச்சி அருகே சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோதவாடி குளத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீர் மூலம், 15க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. ஆனால், இந்த குளத்துக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாமல், அக்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய துவங்கியது. அது மட்டுமின்றி விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்தனர். கோதவாடி குளத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி தூர்வாருவதுடன், பிஏபி திட்ட கால்வாய் மூலம் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது அந்த குளத்தை சுற்றிலும் புதர்சூழ்ந்து காடுபோல் வறண்ட இடமாக மாறியுள்ளது. இந்த குளத்திற்கு விமோசனம் எப்போது வரும்? என விவசாயிகள் ஏங்கி தவிக்கின்றனர். நகர் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ரோட்டோரம்  ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோல் மக்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் கிடப்பில் போட்டிருக்கிறார்.

* ‘எண்ணற்ற திட்டங்கள்’
பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கூறும்போது, ``பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு, நான் எனது பணியை செம்மையாக செய்து முடித்துள்ளேன். நீண்டநாள் கனவான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய சாலைகள், நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வடசித்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காக 4.17 ஏக்கரில் 512 குடியிருப்புகள், பாதாள சாக்கடை திட்டம் என எண்ணற்ற திட்டங்களை  நிறைவேற்றியுள்ளேன்’’ என்றார்.

* ‘வளர்ச்சி பணிகள் நிலுவை’
திமுக விவசாய அணி மாநில துணை  தலைவர் தமிழ்மணி கூறும்போது, ‘‘பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற அனைவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. பாதாள சாக்கடை பணியை திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. காந்தி வாரச்சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்கவில்லை. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் விஸ்தரிப்பு செய்யப்படாமல் உள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. பணிகளின் சுணக்கத்தால், அதிமுகவினர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்’’ என்றார்.

Tags : Pollachi ,MLA ,Pollachi Jayaraman , Did you say red? Pollachi MLA Pollachi Jayaraman has put the demands on hold
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!