வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக தமிழகத்தில் இரவில் மின்சப்ளை துண்டிப்பு: காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக இரவு நேரங்களில் மின் சப்ளை துண்டிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் பெறும் பிரிவு தலைவரும் வழக்கறிஞருமான சி.கனகராஜ் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அடிக்கடி மின்வாரிய ஊழியர்களால் மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும், சென்னையில் பெரும்பாலான பகுதிகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட இரவு நேரங்களில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வற்காக இந்த ஏற்பாடுகளை மின்வாரிய ஊழியர்கள் வேண்டும் என்றே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு தமிழகத்தில் தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறு தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மின்சப்ளை துண்டித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>