×

சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வாக்காளர் அல்லாதோர் வெளியேற வேண்டும்: தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இன்று இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் பல்வேறு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளில் விதிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர், குறுஞ்செய்தி மற்றும் இணையத்தில் பிரசாரம் செய்யக்கூடாது.  

இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று இரவு 7 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இன்று இரவு 7 மணி முதல் செயல் திறனற்றதாகிவிடும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்கு சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. 2 நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்கு சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்க கூடாது. இங்கு எந்தவிதமான உணவு பொட்டலங்களும் பரிமாற கூடாது. இந்த முகாம்களில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். இந்த பிரசார அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்புடைய நபர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Non-Voters Must Exit Assembly Constituencies: Election Officer Order
× RELATED சொல்லிட்டாங்க…