×

வேலூரில் வரலாறு காணாத வெயில் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்: வேட்பாளர்கள் தவிப்பு

வேலூர்: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, சேலம், வேலூர், மதுரை போன்ற முக்கிய நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் தினந்தோறும் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கமே வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாக 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது. கடந்த 30ம் தேதி அதிகபட்சமாக 106.3 டிகிரியும், 31ம் தேதி 106.7 டிகிரியும், 1ம் தேதி 109.2 டிகிரியும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று வரலாறு காணாத வகையில் அதிகபடியாக 110.1 டிகிரி வெயில் கொளுத்தியது.

காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பின்னர் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. வயதானவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். மின்விசிறி காற்றுகூட அனலாக கொதித்தது. இதனால் மக்கள் வியர்வையில் குளித்தனர். இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வெயில் கொடுமையால் பிரசாரம் செய்யாமல் முடங்கினர். சிலர் மாலை நேரங்களில் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

‘பவர் கட் : இரவில் புழுக்கம்’
காட்பாடி தாலுகா திருவலத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் உள்ள சிடி என்ற பகுதியில் பழுது ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பகுதிகளுக்கு செல்லும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் இருளில் மூழ்கியது. பின்னர் காட்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதையடுத்து உடனடியாக மின் சப்ளை செய்யும் வகையில் சீரமைப்பு பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் மின் சப்ளை செய்யப்பட்டது. திடீரென மின் நிறுத்தத்தால் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்கள் தவித்த நிலையில் மின்சாரமும் தடைபட்டதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியர்வையில் குளித்தனர்.

Tags : Vellore , Public freeze on unprecedented houses in Vellore: Candidates suffering
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை