×

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முதல்முறையாக நின்று சென்ற தேஜஸ் விரைவு ரயில்

திண்டுக்கல் : மதுரையில் இருந்து சென்னைக்கு நாள் தோறும் பகல் நேரத்தில் தேஜஸ் விரைவு ரயில் கடந்த இரண்டு வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. மதுரை, கொடைரோடு, திருச்சி ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் மட்டுமே தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும். இதனால் திண்டுக்கல், தேனி, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் கொடைரோடு ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக வர்த்தகர்கள் சங்கத்தினர், திண்டுக்கல் தொகுதி திமுக எம்.பி வேலுச்சாமியிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவரது முயற்சியின் பேரில் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி நேற்று முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த தேஜஸ் விரைவு ரயில் முதல் முறையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது வர்த்தகர் சங்கத்தினர் சார்பாக மேள, தாளங்கள் முழங்க மலர்களை தூவி தேஜஸ் ரயிலை வரவேற்றனர். மேலும் ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிலைய அதிகாரி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இதுகுறித்து நத்தத்தை சேர்ந்த ரயில் பயணி சையது கூறுகையில், பகல் நேரத்தில் தென் மாவட்டத்திற்கு ரயில் வருவது வரவேற்கத்தக்கது. அதேநேரம் கொடைரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்வது பயணநேரம் குறையும். சென்னையில் இருந்து ஐந்து மணி நேரத்தில் திண்டுக்கல் வந்து விடுகிறது. எனவே, போக்குவரத்துக்கு வசதியான இந்த ரயிலில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்வார்கள். எனவே, இதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags : Tejas ,Dindigul railway station , Dindigul, Tejas train,First time, Madurai
× RELATED ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து