×

ராஜபாளையம் தொகுதி யாருக்கு? அதிருப்தி அலையை சமாளிக்குமா அதிமுக?

*எளிமையால் கவர்கிறார் திமுக வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி ஒரு அற்புத கலாச்சார நகரமாகும். நச்சாடை தவிர்த்த நாயகி பெரிய கோயில், மாயூரநாதர் சுவாமி கோயில், நீர்காத்த அய்யனார் கோயில், சாஸ்தா கோயில் என பல்வேறு பழமைக் கோயில்கள் கொண்ட ஆன்மிகம் மணக்கும் தொகுதியாகும். சென்னை மாகாண முதல்வராக இருந்த பிஎஸ்.குமாரசாமி ராஜாவின் சொந்த ஊர் பெருமையும், இப்பகுதியில் இருந்தே தேர்தல் மூலம் அவர் தேர்வாகி, முதலமைச்சரானதும் இத்தொகுதியின் பெருமையாகும். பெண்கள் அதிகம்... ராஜபாளையம் தொகுதியில் 1,16,258 ஆண் வாக்காளர்கள், 1.22,414 பெண் வாக்காளர்கள், இதரர் 29 பேர் என மொத்தம் 2,38,701 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியில் நெல், மா, தென்னை போன்ற விவசாயம் பிரதானமாக இருக்கிறது. மேலும், விசைத்தறி கூடங்கள், 50க்கும் அதிக நூற்பாலைகள் இருக்கின்றன. பேண்டேஜ் உற்பத்தியும், பெண்களுக்கான ஆடைகள் தயாரித்தும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜவுளி பூங்கா அமையுமா?

ராஜபாளையம் தொகுதியில் நூற்பாலைகள் அதிகமிருப்பதால், ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது. ராஜபாளையம் பகுதியில் விளையும் சப்பட்டை மாம்பழம், பஞ்சவர்ணம் ஆகிய ரகங்களுக்கு மவுசு அதிகம். இப்பகுதியில் விளையும் மாங்காய்களை பதப்படுத்தி மாம்பழ கூழ் பதனிடும் கிடங்கு அமைக்கும் கோரிக்கையும் இருக்கிறது. ஒரு அரசு கல்லூரி கோரிக்கையும் உண்டு.


அதிமுக முட்டுக்கட்டை:


ராஜபாளையத்தின் பாரம்பரியமிக்க நாட்டு இன புகழ்மிக்க ராஜபாளையம் நாய், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாட்டு இன நாய்களும் இப்பகுதியில் பண்ணைகள் அமைத்து விற்பனை நடக்கிறது. இந்த பாரம்பரிய நாட்டு நாய்களை பாதுகாக்க நாய் அருங்காட்சியகம் கோரிக்கையும் உண்டு.


இஎஸ்ஐ மருத்துவமனையை நவீனப்படுத்தி தரம் உயர்ந்தவும், புறவழிச்சாலை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. திமுக வசம் தொகுதி இருந்தபோதும், ஆளும் அதிமுக அரசு தொகுதிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் தடைகளையே விதித்து வந்தது. பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பணிகளையும் ஆளும் அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் ராஜபாளையம் தொகுதிக்கு ராஜேந்திரபாலாஜி எதுவுமே செய்யவில்லை என்ற புகார் இருக்கிறது. தொகுதிக்கான திட்டங்களை கடந்த காலங்களில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் போராடியே பெற முடிந்தது.

தொகுதி மாற்றம் ஏன்?


ராஜபாளையம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 5 முறை, திமுக 2 முறை, காங்கிரஸ் 2 முறை, சுயேச்சை 2 முறை, கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறை வென்றுள்ளன. கடந்த முறை சிவகாசியில் போட்டியிட்டு அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, இம்முறை ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த இவர், தற்போது ராஜபாளையம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். தொகுதி மாறி வந்து நிற்பதாலும், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதாலும், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கு எதிரான செயல்பாடுகளினாலும், தொகுதிக்கென நல்ல அறிமுகம் இல்லாத நிலையில், இவர் களமிறங்கி இருக்கிறார்.


சர்ச்சையின் நாயகர்...

கடந்த 2011, 2016 என இரு தேர்தல்களில் வெற்றி பெற்று,  10 ஆண்டுகளாக  சிவகாசியில் கோலோச்சிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி மற்றும் ஒன்றிய  கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட எதுவும் செய்யவில்லை என்ற புகார் உள்ளது. கொரோனா  முடக்கத்தில் வேலையிழந்த பட்டாசு தொழிலாளர் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய முறையில் பேசுவது, வாரப்பத்திரிக்கை நிருபர் மீதான கொலை வெறி தாக்குதல்... இப்படி தொகுதியில் இவரது செயல்களை சிவகாசி மக்கள் மறக்கவில்லை. மாவட்டத்தில் கடந்த 5  ஆண்டுகளில் நடந்த வேலைகளை ஆளுங்கட்சியினருக்கே வழங்கவில்லை என்ற பேச்சும் அதிமுகவினரிடமே உள்ளது.

திமுக ஆட்சியில் திட்டங்கள்:  இதற்கும் முன்பு அதிமுக எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் ராஜபாளையம் தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பணியையும் செய்ததில்லை. இதனால் அதிமுக வேட்பாளருக்கான வரவேற்பு சரிந்திருக்கிறது. மேலும், திமுக ஆட்சியின்போதுதான் ராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையம், மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவார பகுதியில் இரண்டாம் நிலை நீர் தேக்க பகுதி, கிழக்குப் பகுதியில் மலையடிப்பட்டி மலை அடிவாரத்தில் நீர்த்தேக்கத் தொட்டி, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் வகையில் சாஸ்தா கோயில் அணைக்கட்டு சுற்றுலா தலம் போன்ற பணிகள் நடந்தன.

எளிமையான வேட்பாளர்...

 தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான தங்கபாண்டியன், மீண்டும் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் இப்பகுதியை சேர்ந்தவர். தினசரி மக்களோடு மக்களாக தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். எளிதாக இவரை தொடர்பு கொள்ள முடியும் என்பதால் தொகுதி மக்கள் விரும்பும் வேட்பாளராக உள்ளார். அமமுக வேட்பாளராக காளிமுத்து போட்டியிடுகிறார். இவர் சமூகம் சார்ந்தும், அதிமுகவிற்கான ஓட்டுகளை பிரிக்கும் நிலையில்தான் இருக்கிறார். மேலும் இத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமக வேட்பாளர் விவேகாநந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயராஜ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சைகள் என போட்டியிட்டாலும் திமுக - அதிமுக இடையே நேருக்கு நேர் போட்டியாகவே இருக்கிறது. அமைச்சர் மீதான அதிருப்தி அலை அதிகம் உள்ளதால், இம்முறையும் திமுகவே தொகுதியை தக்க வைக்கும் நிலை இருக்கிறது.

சர்ச்சை பேச்சு நாயகன்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்றாலே சர்ச்சை பேச்சுக்கு புகழ் பெற்றவர் எனலாம். ‘கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும். தூக்கில் போட வேண்டும். எம்பியை ரப்பர் குண்டால் சுட வேண்டும்’ மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான இவரது பேச்சும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மோடியை டாடி என இவர் கூறியது, மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் உதவியது.

ராஜபாளையத்தை தேர்வு செய்தது ஏன்?


‘‘அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உளவுத்துறை அறிக்கை சாதகமாக இல்லாததால் சிவகாசியில் தொகுதியில் இருந்து ராஜபாளையத்துக்கு மாற முடிவு செய்தார். மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர் தொகுதிகள் திமுக வேட்பாளர்களுக்கு பலமானவை. திருவில்லிபுத்தூர் தனி தொகுதி. சாத்தூரில் நின்றாலும் சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மன், அமமுகவில் நிற்பதால் ஓட்டை பிரிப்பார். எனவேதான், பாஜ விரும்பி கேட்டு நடிகை கவுதமியை வேட்பாளராகவே அறிவித்த தொகுதியை தலைமையிடம் போராடி பெற்றிருக்கிறார் அமைச்சர்...’’ என மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.


Tags : Rajapalam , Rajapalayam, TNELections2021,Constituency Roundup, AIADMK, DMK
× RELATED பலசரக்கு கடைக்குள் புகுந்து பெண்...