×

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் போட்டியிடும் மதுரை மேற்கு, திருமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா

மதுரை :  மதுரை மேற்கு, திருமங்கலம் தொகுதிகளில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ, உதயகுமார் சார்பில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவர் மீதும் நடவடிக்கை கோரி புகார் செய்யப்பட்டுள்ளது.மதுரை மேற்கு தொகுதியில் 3வது முறையாக அதிமுக வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இத்தொகுதிக்கு உட்பட்ட சொக்கலிங்கம் நகர் பகுதியில் 3 அதிமுகவினர் வீடு வீடாக சென்று பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.

தகவலறிந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிக்குமரன், சம்பவ இடத்தில் 3 பேரையும் பிடிக்க முயன்றார். அதில் 2 பேர் அவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு தப்பினர். மகேந்திரன் என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் வாக்காளர் பட்டியல், பணம் கொடுத்தவர்களின் செல்போன் விபரங்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பணம் விநியோகம் செய்து தப்பி சென்றவர்கள் பாலா, மற்றொருவர் எலக்ட்ரீசியன் என தெரியவந்துள்ளது. மகேந்திரன் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து வேட்பாளர் வெற்றிக்குமரன் மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் அளித்த புகார் மனுவில், ‘‘அதிமுக வேட்பாளரான செல்லூர் ராஜூ தரப்பினர் தேர்தல் விதிமுறையை மீறி, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லூர் ராஜூவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

மாணவர்கள் புகார்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் உதயகுமார் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களாக அதிமுகவினர் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இதுதொடர்பாக புகார் அளிப்பதற்காக கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யாவை சந்தித்து மனு அளித்தனர். மனு அளித்த பின் மாணவர்கள் கூறுகையில், ‘‘திருமங்கலம் தொகுதியில் அதிகளவில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். இதன்பேரில் அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மீது மீண்டும் புகார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ மாணிக்கம் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் சோழவந்தான் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஆரத்தி தட்டுடன் நின்ற பெண்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெஸ்டின் ஜெயபாலிடம், திமுகவினர் நேற்று வீடியோ ஆதாரத்துடன் மேலும் ஒரு புகார் அளித்தனர். அதில், கடந்த மார்ச் 27ம் தேதி கரட்டுப்பட்டி எனும் கிராமத்தில் நடந்த பிரசாரத்தின்போது மாணிக்கம் எம்எல்ஏ அதிமுகவினர் மூலம் ஆரத்தி தட்டுடன் நின்றவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தெரிவித்துள்ளனர்.சோழவந்தான் தொகுதி திமுக தலைமை முகவரும், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை செயலாளருமான கோகுல்நாத் கொடுத்துள்ள புகாரில், பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக வேட்பாளரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : Cellur Raju ,Udayakumar ,Madurai West ,Thirumangalam , Madurai West, Thirumangalam,Sellur Raju, Udayakumar, AIADMK
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...