தேர்தல் பறக்கும்படை சோதனையில் ₹1 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல்

* ஆம்பூரில் பரபரப்பு

ஆம்பூர் :  ஆம்பூரில் ₹1 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர் நேற்று காலை ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை ராஜிவ்காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளரும், பறக்கும் படை அலுவலருமான சவுந்தரராஜன் அவ்வழியாக வந்த ஒரு பார்சல் கம்பெனி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார்.

 அப்போது அதில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ₹1 லட்சம் மதிப்பிலான குட்கா இருப்பது தெரியவந்தது.  தொடர்ந்து பிடிபட்ட குட்கா மூட்டைகளை  பறக்கும் படையினர் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், பிடிபட்ட  லாரியை ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  லாரியை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன்(55) என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் வாணியம்பாடியிலும் இதுபோன்ற 4 மூட்டைகள் டெலிவரி செய்யப்பட்டதாக டிரைவர் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More