×

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 500 அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள்

வேலூர் : தமிழகம் முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமென்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதி, கழிவறை வசதியுடன், புல்தரை, பசுமைத்தோட்டமுடன் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ₹20 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 500 அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் என மொத்தம் ₹100 கோடியில் அமைக்கப்பட்டன. இதற்கான நிதியை மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து ₹50 கோடியும், 14வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ₹50 கோடியும் என ஒதுக்கியும் அரசு உத்தரவிட்டது.  மேலும் இதற்காக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தலைமையில் திட்ட இயக்குனர் செயலராகவும், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர், உதவி இயக்குனர் ஊராட்சிகள், உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டது.


alignment=



இக்குழு 15 நாட்களுக்கு ஒரு முறை அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் செயல்பாடுகளையும், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதையும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தல் வழங்கியது. அதன்படி, அப்போதைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 20 ஊராட்சிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் என மாநிலம் முழுவதும் 500 ஊராட்சிகளில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் நடைபாதை, புல்தரை என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில், புதிய மணப்பெண்ணை கவனிப்பது போல, அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அந்தந்த ஊராட்சி மன்றம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்கு கவனிக்கப்பட்டதுடன், அதன் செயல்பாடுகளும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.ஆனால் நாளடைவில் இப்பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஊராட்சிகள் தவிர 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கவனிப்பாரற்று, பூட்டப்பட்டு சிதிலமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த அலுவலர்களிடம் கேட்டபோது, ‘தொடர் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு மேற்கொள்வது என்பதிலும், உடற்பயிற்சிக்கான பயிற்சியாளர் யாரும் இல்லாததாலும், படிப்படியாக இவை கைவிடப்பட்டன என்பதை ஒப்புக் கொள்கிறோம்’ என்றனர்.

Tags : Tamil Nadu , Amma Park, Amma Gym,Tamilnadu, TNGovt
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...