×

வாணியம்பாடி அமைச்சர் தொகுதியாக இருந்தும் பலனில்லை 2 முறை பூமி பூஜை போட்டும் நிறைவேறாத நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை பணி

*10 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளுடன் காத்திருக்கும் மக்கள்

வாணியம்பாடி : பல கோடி நிதி ஒதுக்கி 2 முறை பூமி பூஜை போட்டும் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளாக பல கோரிக்கைகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 894 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 12பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 845 பேரும், மூன்றாம்  பாலினத்தவர் 37 பேர் என உள்ளனர்.

 கடந்த 2011 -ம் ஆண்டு அ.தி.முக வேட்பாளர் கோ.வி.சம்பத்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக  கடந்த 2016 ஆம் ஆண்டில், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட நிலோபர் 69,588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
வாணியம்பாடியில் பிரதான தொழிலாக தோல்தொழிலும், விவசாயம், பீடித்தொழில், செங்கல் சூளை போன்றவையாகும்.

வாணியம்பாடியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும்  பணியாற்றி வருகின்றனர். ஆண்டிற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலாவணியை பெற்று தரக்கூடிய தொழிலாக,  தோல் தொழில் உள்ளது. தென்னை, வாழை, நெல், கரும்பு, பருத்தி போன்றவற்றை பயிரிட்டு விவசாயமும் செய்து வருகின்றனர்.  அண்மைக் காலமாகவே,  இந்த மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது.  மழையை நம்பி மட்டுமே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

  இந்த தொகுதியில் வாணியம்பாடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக,  நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பல கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிகள் செயல்படுவதற்காக 2 முறை பூமி பூஜை மட்டுமே போடப்பட்டு, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டன. இதனால், வாணியம்பாடி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள், முதல் பட்டதாரியாக படிப்பைத் தொடர்வதற்கு முடியாத சூழ்நிலையே இருக்கின்றன. தனியார் கல்லூரிகள் மட்டுமே வாணியம்பாடியில் அதிகமாக உள்ளன. தனியார் கல்லூரிகளில் அதிகளவில் பணம் செலுத்தி படிக்க முடியாத சூழ்நிலையில், அரசு மற்றும் கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. அதிக அளவில் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். தனியார் தோல் தொழிற்சாலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கென அரசு தொழிற்பேட்டை இங்கு இல்லை. இதற்காக பதவியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதற்கான திட்டத்தைக்கொண்டு வரவில்லை எனக் கூலித் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் செய்துள்ளவை, வாணியம்பாடியில் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம், ஈ.எஸ்.ஐ.மருத்துவமனை  உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து உள்ளார். தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய நிலவரத்தை பொறுத்த அளவில் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் கட்டி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமைபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு  வர வேண்டும்.
ஆந்திராவுக்கு மக்கள் சென்றுவர கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

பாலாறு பகுதியில் தடுப்பணைகளைக் கட்டி, நீர் தேக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடிவருகின்றனர்.  தென் பெண்ணை - பாலாறு திட்டத்திற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இருந்த பொழுது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால், அதற்கு பின்னால் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இத்திட்டத்திற்கான கூடுதல் நிதி ஒதுக்கியதோடு சரி. ஆனால், திட்டத்தினை செயல்படுத்தவில்லை.

அதற்காக, இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதே விவசாயிகளின் வேதனைக் குரலாக உள்ளது. ஆலங்காயம் ஒன்றியம் நெக்னாமலை ஊராட்சியில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை இல்லாமல் போராடிவரும் கிராம மக்கள்,  இதற்கிடையில் பொதுமக்களே தாமாக மண் சாலைகளை அமைத்து, அதனை  பயன்படுத்தி வருகின்றனர். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமாக மக்கள் நீண்டகாலமாக கோரிக்கையாக உள்ளது.

வாணியம்பாடி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூரில்  தடுப்பணை பராமரிக்காமல், முழுமையாக சேதம் அடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். வாணியம்பாடி தும்பேரி கிராம எல்லைக்குட்பட்ட வெலதிகமாணிபெண்டா மலைப்பகுதியில் உள்ள ஏரியில் படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக அறிவித்தால், ஏலகிரி மலைக்கு மாற்றாக அமையும். சுற்றுலா விரும்பிகள் அதிகம் பயணித்து, இக்கிராம பொருளாதாரம் முன்னேற்றம் பெரும் என்பது போன்ற  கோரிக்கைகளே, இத்தொகுதியில் உள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

   வாணியம்பாடியில் உள்ள ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளப்பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். வாணியம்பாடியில் பெரும்பகுதியாக உள்ள இஸ்லாமிய சமுதாயத்துக்கு உருது பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். மாவட்ட மருத்துவக்கல்லூரியும், இயற்கை மருத்துவ மனையும் ஏற்படுத்த வேண்டும்.  மாவட்ட விளையாட்டு மைதானம், சர்வதேச அளவில் மிளிரும் வீரர்களை உருவாக்கும் வகையில், அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாணியம்பாடியில் அரசு நர்சிங் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்.

புராதனக்கோயில்களை புனரமைத்து, மக்கள் வழிபாடு செய்ய, அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுத் தரவேண்டும். தோல் தொழிலுக்கு பெயர் போன வாணியம்பாடியில் டிரேட் சென்டர் உருவாக்கப்பட வேண்டும். தோல் தொழிலில் உள்ள மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ. எனப்படும் தொழில் பயிற்சி மேற்கொள்ள பயிற்சி மையம் வேண்டும்.  அறிவியல் மையம், பெண்கள் விடுதி, தென்னை தொழில் உற்பத்தியை மேம்படுத்தத் தேவையான தொழில் பிரிவுகளை உருவாக்க வேண்டும். வாணியம்பாடிக்கு பெண்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் வட்டியில்லா சிறு கடன் உதவி (மைக்ரோ லோன்) வழங்க தனி வங்கி அமைத்துத்தர வேண்டும். (மகிளா பேங்க் முறை)   வாணியம்பாடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

  கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமண நிதிஉதவி வேண்டி பதிவு செய்து வைத்துள்ள பெண்களுக்கு, தாலிக்கு தங்கம், நிதிஉதவி வழங்கவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணியம்பாடியில் கட்டப்பட்டுவரும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் குடியிருப்பில் அனைத்து சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பளித்து உண்மையான பயனாளிகள் தேர்வு செய்து குடியிருப்பு ஒதுக்க வேண்டும்.   இப்படி வாணியம்பாடி தொகுதி மக்களின் கோரிக்ைக ஏராளம் உள்ளது. தீர்வு கிடைப்பது என்பது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருந்ததால் அதிமுக அமைச்சர் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Tags : Minister ,Vanyambati ,Newtown Railway ,Tunnel , Vaniyampadi, Railway Bridge NewTown Railway Subway
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...