ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை 7 மணி முதல் ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்கள், கடை வைத்திருப்பவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மலர் தூவி, பொன்னாடை போற்றி, உற்சாகமாக அவரை வரவேற்றனர். மேலும், திமுகவுக்கு தான் எங்கள் வாக்கு, நிச்சயம் வெற்றி பெறுவீர்கள், என்று உறுதியளித்தனர்.

அதை தொடர்ந்து மக்களை வீடு வீடாக சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது மயிலை த.வேலு பேசுகையில், ‘இந்த தொகுதியை பற்றி நன்கு அறிந்தவன் நான். இந்த தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன தேவை என்பதையும் அறிந்தவன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மயிலாப்பூர் தொகுதியில் சிறப்பு மிகுந்த கோயில்கள் அமைந்துள்ளதால், மயிலாப்பூர் பகுதியை சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்.

சிறந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். சட்டமன்ற வேட்பாளரின் பணியை சிறப்பாக செய்து மக்களிடம் நன்மதிப்பை பெறுவேன்,’ என்றார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுட்டனர்.

Related Stories: