எய்ம்ஸ் மிக விரைவாக அமைக்கப்படும்: மதுரை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தகவல்

மதுரை: ‘‘மதுரையில், 2019-ல் அடிக்கல் நாட்டி கிடப்பில் போட்டாலும் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்கப்படும்’’ என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். மதுரை ரிங்ரோடு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக, பாஜ, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எங்களது நிதிநிலை அறிக்கையில், பொருளாதார சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு மட்டும் 238 சதவீதம் அதிகமான ரயில்வே கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளோம். வரும் காலங்களில் நாங்கள் வெற்றி பெற்றால் இதைவிட அதிகமான ரயில், விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம்.

5ஜி சேவை விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் கிராமங்களில்கூட மக்களின் வாழ்க்கை வசதி இன்னும் சுலபமாக மாறும். உள் கட்டுமானங்கள் வளரும்போது அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். வைகையில் எதிர்காலத்தில் தடையற்ற வகையில் தண்ணீர் ஓடும். பாசனத்திற்காக அதிகமான தண்ணீரை கொடுப்போம். அதன்மூலம் விவசாயத்தை மேம்படுத்துவோம். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் வந்துள்ளன. மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். சர்வதேச தரத்துடன் எய்ம்ஸ், மிக விரைவாக, முறையாக மதுரையில் அமைக்கப்படும். மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள் தாய்மொழியிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது  என்றார்.

2019 எம்.பி.தேர்தலின்போது அடிக்கல்

இந்தியாவில் கடந்த 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக நரேந்திரமோடி தமிழகம் வந்து பிரசாரம் செய்தார். அந்த வகையில், 2019 ஜனவரி 27ல் பிரசாரக்கூட்டத்துக்காக மதுரை வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் பணியோடு எய்ம்ஸ் கட்டுமானப்பணி கிடப்பில் கிடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி சுமார் 2 ஆண்டுகள், 2 மாதங்களை கடந்தும் ஒரு செங்கல் கூட கட்டுமானத்துக்காக எடுத்து வைக்கவில்லை. தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என பேசி உள்ளார்.

Related Stories:

>