கொரோனா பரவலை தடுக்க தேர்தலுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டுப்பாடுகள்? இயல்பு வாழ்க்கை பாதித்தாலும் ஏற்க வேண்டும் விதிமீறும் ஓட்டல்கள் 20 நாள் ‘சீல்’ மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: தேர்தலுக்கு பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்போது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த கசப்பான அனுபவத்தை பொதுமக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, மெரினா கடற்கரையில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது.  கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை இணை ஆணையர்களிடம் ஆலோசனை நடத்தினோம். சென்னையில் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியில் 6,000 பேர் ஈடுபட உள்ளனர்.

குறிப்பாக வயிற்றுப்போக்கு, தலைவலி, காய்ச்சல், இருமல் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் விவரம் பெயர் சேகரிக்கப்படுகிறது. கொரோனா நோயாளிகள், ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க 1000 பேர் நியமிக்க உள்ளோம். சென்னையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம். முகக்கவசம் அணிவது கடுமையாக்கப்படும். ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், மால்களை கண்காணிபோம். அங்கு விதிமீறல்கள் இருந்தால் அவற்றுக்கு சீல் வைத்து, 20 நாள் மூடப்படும்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சென்ைனயில் பொதுமக்கள் அதிகம் கூடும் பொதுஇடங்கள், சுற்றுலா தலங்கள், மெரினா கடற்கரையில் எந்த விதமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிறகு மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளை கடுமையாக கொண்டுவர உள்ளோம். இந்த கட்டுப்பாடுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். எனினும் அந்த கசப்பான அனுபவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

>